கொய்யாவில் நுண்ணூட்டச் சத்து குறைபாட்டால் மகசூல் இழப்பால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தோட்டக் கலைத் துறை மதுரை மாவட்ட துணை இயக்குநர் கி.ரேவதி, உதவி இயக்குநர் ரா.நிர்மலா ஆகியோர் கள ஆய்வு செய்தனர்.
மதுரை அலங்காநல்லூர் வட்டாரத்தில் 1000 எக்டர் பரப்பில் கொய்யா சாகுபடி செய்யப்படுகிறது. பரவலாக லக்னோ 49 ரகமும், சிவப்பு கொய்யா ரகங்களான அர்காகிரண், தைவான் பிங்க், விஎன்ஆர் ரகங்கள் சாகுபடியாகிறது. கொய்யா மரங்களில் நுண்ணூட்டச்சத்து குறைபாட்டால் மகசூல் இழப்பால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் கி.ரேவதி, உதவி இயக்குநர் ரா.நிர்மலா ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இதுதொடர்பாக உதவி இயக்குநர் ரா.நிர்மலா கூறியதாவது: “நுண்ணூட்டச் சத்துகள் பயிர்களின் வளர்ச்சி, மகசூலுக்கு முக்கியம். இது குறைந்தால் வளர்ச்சி குன்றி, பூச்சி நோய் தாக்குதல் அதிகரித்து மகசூல் குறையும். தகுந்த நேரத்தில் இச்சத்துகளை பயிர்களுக்கு அளிப்பதால் பாதிப்பிலிருந்து பாதுகாக்கலாம்.
பச்சையம் இலைகளில் உருவாகி ஒளிச்சேர்க்கை நடைபெற இரும்புச்சத்து முக்கியம். இக்குறைபாட்டால் இளம் துளிர்கள் வெளிரி காணப்படும். இதற்கு எக்டருக்கு 10 கிலோ தொழு உரத்துடன் 50 கிலோ அன்னபேதி உரத்தை கலந்து அடியுரமாக இடவேண்டும். அல்லது ஒரு கிலோ இரும்பு சல்பேட் உரத்தை 200 லி தண்ணீரில் கலந்து இலைவழி உரமாக 15 நாட்களுக்கு ஒரு முறை வீதம் 2 தடவை தெளிக்க வேண்டும். உவர் நிலங்களில்போரான் சத்து குறைபாடு காணப்படுவதால், நுனி இலைகள் சிறுத்து மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் இருக்கும். பூக்கள் அதிக அளவு உதிரும். இதற்கு 2 கிராம் போரிக் அமிலத்தை ஒரு லிட்டர் நீரில் கலந்து இலைவழி உரமாக 15 நாட்களுக்கு ஒரு முறை வீதம் 2 தடவை தெளிக்க வேண்டும்.
மக்னீசியம் குறைபாட்டினால் முதிர்ந்த இலைகள் வெளிரி, சிவப்பு, ஆரஞ்சு புள்ளிகள் தோன்றி இலைகள் உதிர்ந்து விடும். இதற்கு எக்டருக்கு 20 கி மக்னீசியம் சல்பேட்டை அடியுரமாக இட வேண்டும். அல்லது 1 கி மக்னீசியம் சல்பேட், 2 கி யூரியாவை 200 லி தண்ணீரில் கலந்து இலைவழி உரமாக 15 நாட்களுக்கொருமுறை வீதம் 2 தடவை தெளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் மரம் நன்கு வளர்வதுடன் நல்ல தரமான காய்களும் கிடைக்கும்” இவ்வாறு அவர் கூறினார்.
அதிகமான மணிச்சத்து, சுண்ணாம்புச்சத்து உள்ள நிலங்களில் துத்தநாக பற்றாகுறை ஏற்படுவதால், இலைகள் சிறுத்து மரம் வளர்ச்சி குன்றியும், இலைகள் தடித்தும், ஓரங்கள் மேற்பக்கமாக சுருண்டும் காணப்படும். இதற்கு எக்டருக்கு 25 கி துத்தநாக சல்பேட்டை அடியுரமாக இடவேண்டும். அல்லது 1 கி துத்தநாக சல்பேட் உரத்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து இலைவழி உரமாக 15 நாட்களுக்கு ஒரு முறை வீதம் 2 தடவை தெளிக்க வேண்டும்.
NEWS EDITOR : RP