கர்நாடகா மாநிலம் பெங்களூரில் Minfful Al Lab எனும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக (சிஇஓ) பணியாற்றி வருபவர் சுச்சனா சேத் (39). இவர் கடந்த 6-ம் தேதி வடக்கு கோவாவில் உள்ள பிரபல ஓட்டல் ஒன்றில் தனது 4 வயது மகனுடன் அறை எடுத்து தங்கியுள்ளார். நேற்று அதிகாலை ஓட்டல் அறையை காலி செய்துவிட்டு அவர் காரில் பெங்களூரு திரும்பினார். அந்த பெண் தங்கியிருந்த ஒட்டல் அறையை ஊழியர் சுத்தம் செய்தபோது அங்கு ரத்தக்கறைகள் படிந்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து ஓட்டல் நிர்வாகம் தரப்பில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஓட்டல் அறையில் பதிவாகி இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது சுசனா சேத் தனது மகனுடன் ஓட்டலுக்கு வந்த நிலையில் திரும்பி செல்லும் போது மகனை அழைத்து செல்லவில்லை என்பது உறுதியானது.
மேலும், சுசனா சேத் பெங்களூரு செல்வதற்காக வாடகை காரை தயார் செய்து கொடுக்கும்படி ஓட்டல் வரவேற்பாளர்களிடம் கேட்டதையடுத்து அவர்கள் தயார் செய்து கொடுத்துள்ளனர். அதன்படி வந்த டாக்சியில் சுசனா சேத் பயணம் செய்துள்ளார். அப்போது அவர் கையில் ஒரு பேக்கை சுமக்க முடியாமல் எடுத்து சென்ற காட்சிகளையும் பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
இதைத் தொடர்ந்து போலீசார் அவர் பயணித்த டாக்சி டிரைவரை தொடர்பு கொண்டு பேசிய போது, கார் கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் சென்று கொண்டிருப்பதாக கூறினார். பின்னர், ஓட்டுநரை காவல் நிலையத்திற்கு காரை கொண்டு செல்லுமாறு கூறினர். அதன்படி டிரைவர், ஜமங்கலா காவல் நிலையத்திற்கு காரை ஓட்டி சென்றார்.அங்கு கோவா போலீசார் கூறியபடி, காரை போலீசார் சோதனை செய்தபோது காரில் இருந்த சூட்கேஸில் அவரது மகனின் சடலம் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் சுசனா சேத்தை கைது செய்தனர். சுசனா சேத் எதற்காக தனது மகனை கொலை செய்தார் என்பதற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.