திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம் மத்தூர் கிராமத்தில் முனிகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் நேற்று காலை பெண் பிணம் ஒன்று மிதப்பதாக அந்த பகுதி மக்கள் திருத்தணி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த திருத்தணி போலீசார் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் கிணற்றில் கிடந்த பெண் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இறந்து கிடந்த பெண் மத்தூர் காந்தி தெருவில் வசிக்கும் சுப்பிரமணி மனைவி கன்னியம்மாள் (வயது 60) என்பதும், நேற்று முன்தினம் பேத்தியின் திருமண நிச்சயதார்த்தத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக, மன வருத்தத்தில் இருந்த கன்னியம்மாள் நேற்று விடியற்காலையில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
மேலும் இந்த சம்பவம் குறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப தகராறில் பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
NEWS EDITOR : RP