வெளிநாட்டில் வேலைபார்த்த வந்த கணவன் அனுப்பிய பணத்தில் மனைவி தன் பெயரில் சொத்துக்களை வாங்கியுள்ளார். வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவர் தன் பெயரில் சொத்துக்கள் வாங்கப்படாததை அறிந்து மனைவி பெயரில் உள்ள சொத்துக்களை தன்னிடம் ஒப்படைக்கக்கூறியும், மனைவி மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் கணவர் கீழமை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் கணவருக்கு சாதகமான தீர்ப்பு வழங்கப்படாததையடுத்து அவர் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சம்பாத்தியம் முழுவதும் தன்னுடையதாக இருக்கும்போது மனைவி வேலைக்கு எதுவும் செல்லாமல் இல்லத்தரசியாகத்தான் இருந்தார். ஆனால் சொத்துக்கள் அனைத்தும் மனைவி பெயரில் உள்ளது அதை மீட்டுத்தரும்படி கணவன் தரப்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து, இல்லத்தரசியாக இருந்தாலும் குடும்பப்பணிகள் அனைத்தையும், குழந்தைகளையும் தானே கவனித்துக்கொண்டதால் சொத்தில் உரிமை உள்ளது என மனைவி தரப்பில் வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கணவன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தார். மேலும், கணவனின் சொத்துக்களில் இல்லதரசியாக உள்ள மனைவிக்கு சம உரிமை உள்ளது. கணவன் சம்பாதிப்பதும் மனைவி குழந்தை குடும்பத்தை கவனிப்பதும் பொதுவானது தான். ஆனால், குடும்பத்தை மனைவி கவனிப்பதால் அவருக்கு சொத்தில் பங்கில்லை என்று கூற முடியாது.
விடுமுறை இல்லாமல் 24 மணி நேரமும் ஒவ்வொரு நாளும் மனைவி வேலை செய்கிறார். அவருடைய பணியுடன் கணவரின் 8 மணி நேர வேலையுடன் ஒப்பிட முடியாது. கணவரின் சொத்துக்களில் மனைவிக்கு உரிமை உண்டு என்று தெரிவித்த ஐகோர்ட்டு கணவன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
NEWS EDITOR : RP