கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சிபிசிஐடி ஏன் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய கூடாது? என்று நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். நீலகிரி, கடந்த 2017 ஆம் ஆண்டு கோத்தகிரி அடுத்துள்ள கொடநாடு பகுதியில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான பங்களாவில் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றிருந்தது. ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், வாளையார் மனோஜ், சயான் உள்ளிட்ட 11 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதில் கார் ஓட்டுநர் கனகராஜ் வாகன விபத்தில் உயிரிழந்தார். தற்பொழுது வரை இந்த வழக்கு தொடர்ந்து உதகை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வாளையார் மனோஜ், ஜித்தின் ஜாய், சயான் மற்றும் ஜம்சீர் அலி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.
அப்போது முதல் குற்றவாளி சயான் தரப்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்த சம்பவம் அரங்கேறிய பங்களாவில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது. இதில் கொலை செய்யப்பட்டு கட்டிவைக்கப்பட்டதாக சொல்லப்பட்ட ஓம் பகதூர் கட்டிவைக்கப்பட்ட மரம் அகற்றப்பட்டுள்ளது. எனவே பங்களாவை ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.இதையடுத்து புலன் விசாரணைக்காக வெளி மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய சூழல் உள்ளது.
அதுமட்டுமின்றி இந்த வழக்கில் 2வதாக குற்றம்சாட்டப்பட்ட வாளையார் மனோஜ் என்பவர் வீட்டில் 2 வாரத்திற்கு முன்பாக சிபிசிஐடி போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். எந்தவொரு சம்மனும் கொடுக்காமல் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர் என்றும் குற்றம்சாட்டப்பட்டது.
வாதத்தை கேட்ட நீதிபதி, கோடநாடு வழக்கில் சிபிசிஐடி ஏன் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய கூடாது? என்று கேள்வி எழுப்பினார். அதுமட்டுமின்றி குற்றம்சாட்டப்பட்டவர்களின் வீடுகளில் சம்மன் கொடுக்காமல் விசாரணை செய்ய கூடாது என நீதிபதி அறிவுறுத்தினார். தொடர்ந்து புலன் விசாரணைக்கு வெளிமாநிலம் செல்வதால் தொலை தொடர்பு தகவல்களை ஆய்வுக்கு அனுப்பி உள்ளதாக சிபிசிஐடி தெரிவித்தது. மேலும் தொலை தொடர்பு தகவல்களை ஆய்வுக்கு அனுப்பி உள்ளதால் சிபிசிஐடி தரப்பில் இருந்து கால அவகாசம் கோரப்பட்டது. சிபிசிஐடி கால அவகாசம் கோரியதை அடுத்து கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை ஜூலை 28ம் தேதிக்கு மாவட்ட நீதிமன்ற நீதிபதி அப்துல் காதர் ஒத்திவைத்தார்.
NEWS EDITOR : RP