சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதில் தமிழ்நாடு அரசுக்கு என்ன சிக்கல் உள்ளது..?? என ராமதாஸ் கேள்வி..!!

Spread the love

சமூகநீதியைக் காக்க பேருந்துகளில் மகளிரிடம் நடத்தப்படும் கணக்கெடுப்பை தமிழ்நாடு முழுவதும் நீட்டிப்பதில் என்ன சிக்கல்? தமிழ்நாட்டில் அரசு நகர பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யும் பெண்களிடம் அவர்களின் சாதி, வயது உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் திரட்டப்படுவது பெரும் சர்ச்சையாகியுள்ளது. இத்தகைய விவரங்கள் திரட்டப்படுவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், அதன் சமூகநீதித் தேவைகளை வலியுறுத்தியிருக்கிறார் போக்குவரத்து அமைச்சர். அரசின் நிலைப்பாடு மிகவும் சரியானது தான். அரசுப் பேருந்துகளில் சமூகநீதியைக் காக்கும் அணுகுமுறை ஒட்டுமொத்த மாநிலத்திலும் சமூகநீதியை காப்பதில் கடைபிடிக்கப்படாதது ஏன்? என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் வினா.

நகரப் பேருந்துகளில் மகளிரை இலவசமாக பயணிக்க அனுமதிக்கும் திட்டம் சமுதாயத்தின் எந்த அடுக்கை சேர்ந்தவர்களுக்கு, எந்த வயதினருக்கு, எத்தகைய வருவாய் உள்ளோருக்கு பயன்படுகிறது என்பதை கண்டறிந்து அதனடிப்படையில் திட்டத்தை இன்னும் கூர்மைப்படுத்துவது தான் இதன் நோக்கம் என்று தமிழக அரசு கூறியிருக்கிறது. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் நோக்கமும் இதுவே தான். கல்வி, வேலைவாய்ப்பு, சமூகநீதி, மக்கள் நலத்திட்டங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகளால் யாரெல்லாம் பயனடைகிறார்கள் என்பதைக் கண்டறிந்து சமூகநீதியை வலுப்படுத்துவது தான் சாதிவாரி கணக்கெடுப்பின் நோக்கம். அதை செயல்படுத்த அரசு மறுப்பது ஏன்? அதில் என்ன சிக்கல் உள்ளது?

கொள்கை அடிப்படையில் சாதிவாரி கணக்கெடுப்பை ஏற்றுக்கொள்வதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறுகிறார். ஆனால், அதை மத்திய அரசு தான் நடத்த வேண்டும் என்கிறார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவும், அதில் தெரியவரும் தரவுகளின் அடிப்படையில் சமூகநீதி நடவடிக்கைளை மேற்கொள்ளவும் மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருப்பதாக பிகார் உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் கூறி விட்ட நிலையில், மத்திய அரசு தான் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கூறுவது மாநில உரிமைகளை தாரை வார்ப்பது இல்லையா? மாநில உரிமைப் போராளி என்று தம்மை அழைத்துக் கொள்ளும் முதலமைச்சர், சமூகநீதி காக்கும் விஷயத்தில் மாநில உரிமைகளை காவு கொடுக்கலாமா? மாநில அரசுகளே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற குரல் இப்போது நாடு முழுவதும் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதன் நோக்கத்தையும், தேவையையும் புரிந்து கொண்டு தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை தமிழக அரசின் வாயிலாகவே நடத்துவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட வேண்டும்.

NEWS EDITOR : RP

Please follow and like us:

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp
YouTube
Instagram
Telegram