தி.மு.க. இளைஞர் அணி மாநில, மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் அறிமுக கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு இளைஞர் அணி மாநில செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது மு.க. ஸ்டாலின் கூறியதாவது:-
கோடிக்கணக்கான மக்களுக்கு நல்வாழ்க்கையை திராவிட மாடல் ஆட்சி அமைத்து கொடுத்துள்ளது. இந்த திராவிட மாடலை மக்களிடம் பரப்புங்கள். அமித்ஷா நேற்று தமிழகத்திற்கு வந்தாரே, புதிய திட்டங்களை தொடங்கி வைக்கவா வந்தார்? ஏதோ பாத யாத்திரை தொடங்கி வைக்க வந்திருக்கிறார். பாஜக நடத்துவது பாத யாத்திரை அல்ல. குஜராத்தில் 2002-ம் ஆண்டில் நடந்த சம்பவத்திற்கும், தற்போது மணிப்பூரில் நடந்து கொண்டு இருப்பதற்கும் மன்னிப்பு கேட்கும் பாவ யாத்திரை.
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது குறித்து அமித்ஷா பேசியுள்ளார். குற்ற வழக்கு உடையவர்கள் மத்திய அமைச்சர்களாக இருக்கிறார்கள், இது குறித்து பிரதமரிடம் அமித்ஷா கேட்பாரா? பாஜக தங்கள் அரசியல் எதிரிகளை சலவை செய்யும் வாஷிங் மிஷினாக அமலாக்க துறையை பயன்படுத்தி கொண்டிருக்கிறது. பாஜக ஆட்சி முடிய போகிறது. மத்திய அரசின் ஆட்டம் எல்லாம் சில மாதங்கள்தான். இந்தியாவுக்கு விடியல் பிறக்க போகிறது. இந்தியாவை காப்பாற்ற I.N.D.I.A.-வுக்கு வாக்களியுங்கள்” என்றார். 2014-ல் பதவியேற்பு விழாவுக்கு ராஜபக்சேவை அழைத்தவர்கள், இலங்கை பிரச்னை குறித்து பேச உரிமை உள்ளதா?
NEWS EDITOR : RP