இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் முதல் போர் நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதலில் ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்களும், 40,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்கள் படுகாயமடைந்துள்ளனர். ஹமாஸ் அமைப்பின் கடைசி நபர் உயிருடன் இருக்கும் வரை இந்த வேட்டை தொடரும் என எச்சரித்த இஸ்ரேல், அதிதீவிர தாக்குதலை நடத்திக்கொண்டே இருக்கிறது. சர்வதேச நாடுகள் இந்தப் போரை நிறுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் போர் தொடர்ந்துக் கொண்டே இருக்கிறது. இதனிடையே இஸ்ரேலுக்கு எதிராகவும், ஹமாஸுக்கு ஆதரவாகவும் அண்டை நாடான லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பு களமிறங்கியது. அந்த அமைப்பு இஸ்ரேலுக்கு எதிராக குண்டுவீசித் தாக்குதல், ட்ரோன் விமானங்கள் மூலம் தாக்குதல் என போர் நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதன் காரணமாக இஸ்ரேல் லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறித்து வைத்துத் தாக்குதல் நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பில் இருந்தும் நூற்றுக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.