நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்நாட்டுக்கு எதிராக ரஷிய அதிபர் புதின் தலைமையிலான அரசு கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி இறுதியில் போர் தொடுத்தது. ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் இந்த போரில் ரஷியா ஈடுபட்டது.
முதலில் போரை நிறுத்த உலக நாடுகள் குரல் கொடுத்தன. ஆனால், ரஷியா அதனை கேட்க தயாராக இல்லை. போர் தீவிரமடைந்ததும், விலைவாசி உயர்வு, உணவு பொருள் பற்றாக்குறையை வளர்ந்த நாடுகள் உள்பட பல நாடுகளும் சந்தித்து பாதிப்பிற்குள்ளாகின.
இதனால், போரை நிறுத்த வேறு யுக்திகளை உலக நாடுகள் கையாண்டன. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் பொருளாதார தடைகளை விதித்து ரஷியாவை கட்டுப்படுத்த முனைந்தன. ஆனால், அதில் தோற்று விட்டன.
உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் போரில் வாக்னர் எனப்படும் கூலிப்படை அமைப்பு ரஷியாவுடன் இணைந்து உக்ரைன் மீது கொடூர தாக்குதலை நடத்தியது. எவ்ஜெனி பிரிகோஜின் தலைமையிலான இந்த கிளர்ச்சி படை, கடந்த ஆண்டு உக்ரைனின் பல முக்கிய பகுதிகளை கைப்பற்ற உதவியதுடன், சில இடங்களில் ரஷிய கொடியை நாட்டவும் செய்தது. இந்த வாக்னர் என்ற பெயரிலான அமைப்பு, ரஷியாவில் உள்ள சிறைகளில் குற்றவாளிகள் என தீர்ப்பு அளிக்கப்பட்டு, அடைக்கப்பட்டவர்களை பணிக்கு அமர்த்தி ஒரு கூலிப்படையாக இயங்கி வருகிறது. அந்த அமைப்பு தொடக்கத்தில் ரஷிய ஆதரவு படையாக செயல்பட்டு, உக்ரைனில் தாக்குதலை நடத்தியது. இந்த நிலையில், வாக்னர் அமைப்பினர் திடீரென ரஷியாவுக்கு எதிராக கடந்த சனிக்கிழமை திரும்பியது ரஷியாவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் தலைவர் பிரிகோஜின் அதிபர் புதினுக்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். கிளர்ச்சியாளர்கள் மாஸ்கோ நகருக்குள் புகுந்து தாக்குவார்கள் என கூறப்பட்டது. எனினும், அந்த அமைப்பினரை கடுமையாக எச்சரிக்கும் வகையில், ரஷிய அதிபர் புதின் பேசினார். அதன்பின் சமரசம் ஏற்பட்டு உள்ளது. 1990-ம் ஆண்டில் இருந்து புதின் மற்றும் பிரிகோஜின் இருவரும் ஒருவரையொருவர் நன்றாக அறிந்தவர்களாக இருந்தனர். அதன்பின், ரஷிய அரசிடம் இருந்து ஓட்டலுக்கான ஒப்பந்தங்களை பெரிய அளவில் பெற்று பிரிகோஜின் பெரிய செல்வந்தரானார். கிழக்கு உக்ரைனில் தொன்பாஸ் நகரில் 2014-ம் ஆண்டில் ரஷிய ஆதரவு பெற்ற பிரிவினைவாத இயக்க செயல்பாட்டுக்கு பின்னர், பிரிகோஜின் கூலிப்படை தலைவராக மாறினார். வாக்னர் கூலிப்படையினர் மத்திய ஆப்பிரிக்க குடியரசு, சூடான், லிபியா, மொசாம்பிக், உக்ரைன் மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் தடம் பதித்து உள்ளது என சி.என்.என். தெரிவித்து உள்ளது. உக்ரைன் போரில் ரஷியா ஈடுபட தொடங்கியதும், வாக்னர் அமைப்பும் போரில் ஈடுபட்டது. உக்ரைனின் சோல்டார் மற்றும் பாக்முத் நகரங்களை கைப்பற்றுவதில் முனைப்புடன் செயல்பட்டது. ரஷிய தரப்பு முன்னேறி செல்வதற்கு ஏற்ப திறமையான முறையில் செயலாற்றிய ஓர் அமைப்பு என்ற வகையில் வாக்னர் அமைப்பு செயல்பட்டது. எனினும், அந்த அமைப்பினரின் திடீர் கிளர்ச்சியால் ரஷிய அரசுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. இந்த சூழலில் ரஷியாவுக்கு செச்சன் நாட்டு அதிபர் ரம்ஜான் கதிரோவ் ஆதரவு தெரிவித்து பேசினார். பிரிகோஜின் உடன் கூட்டணியாக செயல்பட்டவர் என இதற்கு முன்பு கருதப்பட்ட கதிரோவ், புதினின் நம்பிக்கைக்குரிய ஆதரவாளராகவும் உள்ளவர். பிரிகோஜினின் நடவடிக்கைகள் முதுகில் குத்துவது போன்று உள்ளன. ரஷிய படையினர் தொடர்ந்து உறுதியாக இருக்க வேண்டும் என வலியுறுத்தியதுடன், எந்தவித கோபமூட்டும் செயல்களுக்கும் இரையாகாமல் தவிர்த்திடல் வேண்டும் என்றும் கூறினார். எவ்ஜெனி பிரிகோஜின் தலைமையிலான புரட்சி படையின் கிளர்ச்சியை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு உதவ தயாராக இருக்கிறேன் என கூறினார். பிரிகோஜினின் இந்த நடவடிக்கையானது, கடந்த தசாப்தங்களில் இல்லாத வகையில், ரஷியாவுக்கு தீவிர பாதுகாப்பு நெருக்கடியை ஏற்படுத்தியது. உக்ரைனில் ரஷியா போரில் ஈடுபட்டு உள்ளபோது, உள்நாட்டிலேயே கலகம் ஏற்பட்டது, அதிபர் புதினின் ஆட்சி அதிகாரம் பற்றி கேள்விகளை எழுப்பியது. ரஷிய அதிபர் புதின் கிளர்ச்சி தொடங்கிய பின்னர் முதன்முறையாக உரையாற்றும்போது, வாக்னர் கூலிப்படை குழுவில் உள்ள வீரர்கள், ரஷிய ராணுவத்தில் சேர கூடும் அல்லது பெலாரஸ் நாட்டுக்கு செல்ல கூடும் என கூறினார். ஆனால், அந்த குழுவின் நிறுவனரான பிரிகோஜின் பற்றி எதுவும் கூறவில்லை. இதுபோன்ற சூழலில், பிரிகோஜினுடன் சமரசம் ஏற்பட்டது. ரஷியாவின் அண்டை நாடு மற்றும் புதினுக்கு ஆதரவாக செயல்படும் நாடான பெலாரசில் பிரிகோஜின் அடைக்கலம் கோரியுள்ளார். அந்த நாட்டுக்கு சென்று விட்டால், வாக்னர் அமைப்புக்கு எதிரான குற்ற வழக்குகளை கைவிட வேண்டும் என ரஷியாவிடம் பிரிகோஜின் ஒப்பந்தம் ஏற்படுத்திய பின்னர், அவரது கிளர்ச்சி நடவடிக்கை முடிவுக்கு வந்தது. இதனால், வாக்னர் பெலாரசுக்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், அவர் தற்போது எந்த நாட்டில் உள்ளார் என்ற விவரங்கள் வெளியிடப்படாமல் ரகசியம் காக்கப்படுகிறது. புதின் நேற்று கூறும்போது, உக்ரைன் மற்றும் அதன் மேற்கத்திய கூட்டணி நாடுகள், உள்நாட்டு கலகத்தில் ரஷியர்கள் ஒருவரை ஒருவர் கொல்லட்டும் என விரும்புகிறார்கள் என்று குற்றச்சாட்டாக கூறினார். கிளர்ச்சியாளர்கள் தங்களது ஊடுருவலை திரும்ப பெற்றதும், நாட்டுக்கு முதன்முறையாக உரையாற்றிய புதின் உள்நாட்டு போரை தவிர்க்க, வாக்னர் போராளிகளுக்கு மன்னிப்பு வழங்க உத்தரவிட்டார். இந்த நிலையில், வாக்னர் அமைப்பிடம் உள்ள ராணுவ தளவாடங்களை ரஷிய ராணுவத்தினர் எடுத்து கொள்வதற்கான நடவடிக்கைகள் தயாராகி வருகின்றன என ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
NEWS EDITOR : RP