தலைவர்களுக்கு மரியாதை, தொகுதிவாரியான புள்ளி விவரம், நலத்திட்ட உதவிகள், இலவச மதிய உணவு ஆகியவற்றைத் தொடர்ந்து மாணவர்கள் சந்திப்பு என நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் அடுத்தடுத்த நிகழ்வுகள், அரசியல் களத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. இது அரசியலை நோக்கிய பயணம் என்றும் சொல்லப்படுகிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்…
அரசியலுக்கு வருகிறேன் என்று நடிகர் விஜய் வெளிப்படையாக சொல்லவில்லை என்றாலும், திரைப்படங்களிலும் திரைப்பட விழாக்களிலும் அவர் பேசும் வசனங்கள் அரசியல் வருகையை சொல்வதாக ரசிகர்கள் நம்புகிறார்கள். தேர்தல் களத்தில் உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் வென்று விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
தந்தைக்கு எதிர்ப்பு
விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் கட்சி தொடங்கினார். தலைவராக எஸ்.ஏ.சி, பொருளாளராக ஷோபா சந்திரசேகர், மாநிலச் செயலாளராக திருச்சி ஆர்.கே.ராஜா ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். ஆனால், விஜயின் எதிர்ப்பால், தொடங்கிய வேகத்திலேயே அந்த கட்சி முடங்கியது. இதனால் இருவருக்கும் மனக்கசப்பு மேலும் அதிகரித்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது.
அதேநேரத்தில், விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், அணிவாரியாக நிர்வாகிகள் நியமனம் என மக்கள் இயக்கத்தை வலுப்படுத்தும் பணிகள் ஒருபக்கம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இதை அரசியல் கட்சியாக மாற்றும் நிலையை நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். பனையூர் பங்களாவில், மக்கள் இயக்க நிர்வாகிகளின் தொடர் சந்திப்புகள் இதை உறுதி செய்வதாகவும் சொல்கிறார்கள்.
தொகுதிவாரியாக கவனம்
இதற்கு வலு சேர்க்கும் வகையில், தமிழ்நாட்டில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக புள்ளி விவரங்களை சேகரித்து தர மக்கள் இயக்க நிர்வாகளிடம் அறிவுறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, தீவிர உறுப்பினர் சேர்க்கையும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சட்டமேதை அம்பேத்கர் பிறந்தநாளில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
தொடர்ந்து சுதந்திரப் போராட்ட வீரர், தீரன் சின்னமலை சிலைக்கு புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதைத் தொடர்ந்து இப்தார் நோன்பு, நலத்திட்ட உதவிகள் என விஜய் மக்கள் இயக்கத்தினர் அடுத்தடுத்து நகர்ந்து செல்வது, அரசியல் பாதையை தெளிவாக காட்டி வருகிறது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
இந்நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கடந்த மாதம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “உலக பட்டினி தினத்தை முன்னிட்டு பசி எனும் பிணி போக்கிடும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ‘ஒரு நாள் மதிய உணவு சேவையகம்’ மூலம் மே 28ம் தேதி 234 தொகுதிகளிலும் இலவச மதிய உணவு வழங்கப்படும். தமிழ்நாடு மட்டுமன்றி புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும், விஜய் மக்கள் இயக்கம் சார்பாக மதிய உணவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
முன்பே சொன்ன நியூஸ் 7 தமிழ்
இதைத் தொடர்ந்து, 10 மற்றும் 12ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவி, மாணவிகள் 1,500 பேரை விஜய் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது. மாவட்ட, தொகுதி வாரியாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
தொகுதிவாரியாக முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்கள் மற்றும் ‘வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள நன்றாக படிக்கும் மாணவர்களையும் அவர் சந்திக்க உள்ளார். அவரது பிறந்த நாளான ஜூன் 22ம் தேதி அல்லது அதற்கு சில தினங்களுக்கு முன்னதாக, இதற்கான நிகழ்ச்சி நடைபெறும். இதில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்க உள்ளதாகவும் தெரிந்து சொல் பகுதி மற்றும் இணையதளத்தில் கடந்த மாதம் 26ம் தேதி செய்தி வெளியானது.
தமிழ்நாட்டில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியானது. இதில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை பல்வேறு தரப்பினர் பாராட்டினர். அந்த வகையில், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 விழுக்காடு மதிப்பெண் பெற்ற திண்டுக்கல் மாணவி நந்தினியை விஜய் மக்கள் இயக்கத்தினர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
அதன் தொடர்ச்சியாக மாவட்டந்தோறும் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ள மாணவர்களின் விவரங்களை சேகரித்து தலைமை அலுவலகத்திற்கு இம்மாத இறுதிக்குள் அனுப்ப வேண்டும் என விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நிர்வாகளிடம் தெரிவித்திருந்தார். அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சிறப்பு பரிசு வழங்கப்பட உள்ளதாகவும், அவர்களின் பட்டியலை தயார் செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தார். அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை நடிகர் விஜயே நேரில் சந்தித்து பரிசுகளை வழங்க திட்டமிட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
திருச்சியில் திருப்புமுனை?
இந்த நிகழ்ச்சி நடைபெறுவது தலைநகர் சென்னையிலா? பிற மாவட்டத்திலா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், திருச்சி மாநகரில் அவரது ரசிகர்கள் செய்துள்ள சுவர் விளம்பரங்களில், விஜயின் தந்தை இயக்குநர் S.A.சந்திரசேகர் நல்லாசியுடன்…”திருச்சி என்றாலே திருப்புமுனைதான். விரைவில் மாநாடு காத்திருக்குது தமிழ்நாடு…வா தலைவா” என்றும் “பிறந்தநாள் காணும் அன்புத் தளபதி. நாளைய தமிழக முதல்வர்” என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்னதாக மாநாடு நடத்த உள்ளாரா விஜய்? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால், இந்த விளம்பரத்தை விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் நிர்வாகிகள் விஜய் ரசிகர்கள் என்ற பெயரில் இவ்வாறு செய்துள்ளனர் என்கிறார்கள். விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இது குறித்து அதிகாரப்பூர்வு அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை என்கிறார்கள்.
மாணவர்களை சந்திக்கும் விஜய்
இந்நிலையில், ஜூன் 17 ஆம் தேதி, 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளை சந்தித்து நடிகர் விஜய் ஊக்கத்தொகை வழங்குவார் என்று விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’நடிகர் விஜய்யின் சொல்லுக்கிணங்க, வரும் சனிக்கிழமை (17.06.2023), ’அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ சார்பாக சென்னை, நீலாங்கரையில் உள்ள R.K Convention Centreல் 2023-ஆம் ஆண்டு நடந்து முடிந்த “பத்து மற்றும் பன்னிரெண்டாம்” வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நடிகர் விஜய், மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் முன்னிலையில் சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி கௌரவப்படுத்த உள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.
இளைய தலைமுறையின் வாக்குகளை குறித்து வைத்து விஜய் அரசியல் பாதை நோக்கி அடுத்தடுத்து நகர்கிறாரா? மேலும் ஒரு தலைவர் திரையில் இருந்து வருகிறாரா? அவரை மக்கள் ஏற்பார்களா…? விஜயின் அரசியல் பாதை யாருக்கு எதிரானது? யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்… அடுத்தடுத்த நாட்களில் தெரியும்.
NEWS EDITOR : RP