ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளாவின் கண்ணூருக்கு வந்த இருவருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து இருவரும் பரியாரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து மருத்துவமனைகளில் கூடுதலாக தனி வார்டுகளை அமைக்கும்படி அதிகாரிகளுக்கு, கேரளா சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.
நிலைமையை ஆய்வு செய்வதற்காக மாநில அளவிலான விரைவு பொறுப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்ட இருவரிடம் தொடர்பில் இருந்த நபர்கள் யாருக்காவது அறிகுறிகள் காணப்பட்டால், உடனடியாக கேரள சுகாதார துறைக்கு தெரிவிக்கும்படியும் வலியுறுத்தப்பட்டுள்ளது. குரங்கம்மை தொற்று பாதிப்பு சமீபத்தில் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
குரங்கம்மை தொற்றுக்கான அறிகுறிகள்
குரங்கம்மை விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய வைரஸ் தொற்று ஆகும். நெருக்கமான உடல் தொடர்பு மூலம் இது மனிதர்களிடையே பரவும். இந்த நோய் பாதிப்பு இருந்தால் காய்ச்சல், தசைகளில் வலி, பெரிய கொப்புளங்கள் போன்ற காயம் உள்ளிட்டவை ஏற்படும். இது போன்ற பாதிப்புகள் ஏதேனும் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவதன் மூலம் விரைவில் இத்தொற்றிலிருந்து விடுபடலாம். தனக்கு அறிகுறிகள் இருப்பதாக தந்தேகம் எழுந்தால் மற்றவர்களிடம் இருந்து தனிமைப்படுத்திக் கொள்வது மூலம் தொற்று பரவுவதையும் தடுக்கலாம்.