தமிழகத்தில் தக்காளி விலை மீண்டும் அதிகரித்துள்ளது. சென்னை – கோயம்பேடு சந்தையில் இன்று தக்காளி விலை கிலோவுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.140-க்கு விற்கப்படுகிறது.
தமிழகத்தின் தக்காளி தேவையை ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களே பெரும்பாலும் பூர்த்தி செய்து வருகின்றன. அதனால், தமிழகம் அந்த மாநிலங்களை நம்பி இருக்க வேண்டிய சூழல் உள்ளது. தற்போது விளைச்சல் குறைவால் நாடு முழுவதும் தக்காளி விலை உயர்ந்துள்ளது. தமிழகத்திலும் தக்காளி விலை உயர்ந்துள்ளது. சில்லறை விற்பனை கடைகளில் கிலோ ரூ.140 வரை விற்கப்பட்டு வருகிறது.
சென்னை கோயம்பேடு சந்தைக்கு நாள்தோறும் 1100 டன் தக்காளி வந்துகொண்டிருந்த நிலையில், இது இன்று 400 டன்னாக குறைந்துவிட்டது. இந்நிலையில், கோயம்பேடு சந்தையில் கிலோ ரூ.110-க்கு விற்கப்பட்டு வந்த தக்காளி இன்று ரூ.140 ஆக உயர்ந்தது. தக்காளி கிலோவுக்கு 30 ரூபாய் அதிகரித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகரில் உள்ள சில்லறை விற்பனை கடைகளில் தக்காளியின் தரத்துக்கு ஏற்ப ரூ.100 முதல் ரூ.160 வரை விற்கப்பட்டு வருகிறது. பண்ணை பசுமை கடைகள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட நியாயவிலைக் கடைகளில் தக்காளி கிலோ ரூ.60-க்கு விற்கப்பட்டு வருகிறது. மேலும், கோயம்பேட்டில் பீன்ஸ் கிலோவுக்கு 10 ரூபாய் உயர்ந்து 90 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 250 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்படுகிறது.
NEWS EDITOR : RP