லண்டன் இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனிலிருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு தனது முதல் பயணத்தின் போது, ஆர்எம்எஸ் டைட்டானிக் என்ற சொகுசு கப்பல் ஏப்ரல் 15, 1912 இல் பனிப்பாறையில் மோதி வடக்கு அட்லாண்டிக் கடலில் மூழ்கியது. கப்பலில் இருந்த 2,224 பேரில் 1,500க்கும் மேற்பட்டோர் இறந்ததாக கூறப்படுகிறது. 1985 ஆம் ஆண்டு கடலில் கப்பலின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, டைட்டானிக் கப்பலைச் சுற்றி பல ஆய்வுத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அட்லாண்டிக் கடலில் மூழ்கிக் கிடக்கும் டைட்டானிக் கப்பலை பார்ப்பதற்காக சுற்றுலாப்பயணிகளை அழைத்துச் சென்ற நீர்மூழ்கிக் கப்பல் கடலில் திடீரென மாயமாகி விட்டதாகஅமெரிக்க கடலோரக் காவல் படையினர் தெரிவித்துள்ளனர்.
நியூ பவுண்ட் லேண்ட் கடல் பகுதியில் நீர்மூழ்கிக் கப்பலைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. நீர் மூழ்கிக் கப்பலில் பயணித்த அனைவரையும் பத்திரமாக கரைக்கு அழைத்து வர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நீர்மூழ்கிக் கப்பலை இயக்கும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடல் மட்டத்திற்கு கீழே சுமார் 3,800 மீட்டர் (12,500 அடி) உலகப் புகழ்பெற்ற டைட்டானிக் உள்ளது. பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பலைப் பயன்படுத்தினால் மட்டுமே இந்தக் கப்பலின் இடிபாடுகளைப் பார்க்க முடியும். இந்த சிறிய நீர்மூழ்கிக் கப்பல்கள் சுற்றுலாப் பயணிகளையும் நிபுணர்களையும் ஆழ்கடலுக்கு கட்டணம் செலுத்தி அழைத்துச் செல்கின்றன. ஆழ்கடல் பயணங்களை ஏற்பாடு செய்யும் தனியார் நிறுவனமான ஓசன் கேட் நிறுவனத்திற்கு சொந்தமான நீர்மூழ்கிக் கப்பல் காணாமல் போனது. கப்பலில் உள்ள பணியாளர்கள் பாதுகாப்பாக திரும்புவதற்கான அனைத்து வழிகளையும் ஆராய்ந்து வருவதாக நிறுவனம் கூறி உள்ளது.
NEWS EDITOR : RP