நாட்டின் பெரும்பாலான மாநிலங்களின் நீர் தேவையை பூர்த்தி செய்யும் தென்மேற்கு பருவக்காற்று ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் துவங்கி செப்டம்பரில் விலகும் – இந்திய துணை கண்டத்தில் உள்ள 90% நிலப்பரப்புகள் தென்மேற்கு பருவமழையின் வாயிலாகவே அதிகப்படியான மழைப்பொழிவை பெறுகிறது என்றால் அதில் மாற்று கருத்துக்கள் இல்லை.
தென் மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சாத்திய கூறுகள் முதலில் வங்க கடலில் தெற்கு அந்தமான் அருகே நிலவும் – பின்னர் மெல்ல மெல்ல இந்திய பெருங்கடல் வழியாக நுழைந்து கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கும் – தென் மேற்கு பருவமழையின் நிரந்தர நுழைவு வாயில் கேரள மாநிலம் மட்டுமே.
கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழைப்பொழிவை கொடுத்த பின்னர் கர்நாடகா – மகாராஷ்டிரா, மேற்கு தொடர்ச்சி மற்றும் கொங்கன் மலை தொடர்கள் உள்ள மாநிலங்கள், மத்திய பிரதேசம்,பஞ்சாப் போன்ற மாநிலங்களில் ஊடுருவி பின்னர் அசாம்,மேகலாயா போன்ற வடக்கிழக்கு மாநிலங்களில் பரவலாக மழை பொழிவை ஏற்படுத்தும்.
தென்மேற்கு பருவமழை கேரளாவில் துவங்கி ராஜஸ்தான் மாநிலத்தை அடைந்தால் நாடு முழுவதும் தென் மேற்கு பருவக்காற்று சென்றடைந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு செய்யும் – அந்த வகையில் நடப்பாண்டு தென்மேற்கு பருவக்காற்று ஆரம்பத்தில் ஒரு சில மாநிலங்களில் நல்ல மழையை கொடுத்து வந்தாலும் கேரளா மற்றும் கர்நாடகாவை கொஞ்சம் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது.
இந்திய வானிலை ஆய்வு மையம் ஜுன் -1ம் தேதி முதல் இன்று வரையிலான காலகட்டத்தில் நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை எத்தனை சதவீதம் பெய்துள்ளது என்கிற விபரங்களை வெளியிட்டுள்ளதோடு , அடுத்த மூன்று நாட்களில் நாடு முழுவதும் இருந்து தென்மேற்கு பருவக்காற்று முழுமையாக விடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது.
நிகழ்வாண்டில் கேரளா,கர்நாடகா, உத்திர பிரதேசம், பிஹார், ஜார்காண்ட், மேற்கு வங்கம், மணிப்பூர், திரிபுரா மற்றும் மிசோராம் உள்ளிட்ட ஒன்பது மாநிலங்களில் இயல்பை விட தென்மேற்கு பருவமழை குறைவான மழைப்பொழிவை கொடுத்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழையின் வாயிலாக தமிழகத்தை பொறுத்தவரை மேற்கு தொடர்ச்சி மலை தொடரை ஒட்டியுள்ள மாவட்டங்களான நீலகிரி, கோவை, தேனி, திருநெல்வேலி திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள் மட்டுமே அதிகப்படியான மழைப்பொழிவை பெறுகிறது.
மழை மரை பிரதேசமான தமிழகத்தை பொறுத்தவரை ஆண்டின் சராசரி மழைப்பொழிவான 46 % மழை வடகிழக்கு பருவமழை வாயிலாகவே பெறுகிறது – ஆனாலும் தமிழகத்தை வளம் கொழிக்க செய்யும் காவிரி, வைகை, பவானி, மனிமுத்தாறு போன்ற எண்ணற்ற நதிகளின் பிறப்பிடம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியே இருப்பதால் தென்மேற்கு பருவ மழை பொய்த்தால் அதன் தாக்கம் முழுவதும் தமிழகத்தை இருக்கும் என்பதே உண்மை.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தென்மேற்கு பருவக்காற்று பற்றாக்குறை குறித்த அட்டவணையில் தெற்கு தீபகற்ப இந்தியாவில் கேரளா மற்றும் கர்நாடகா மட்டுமே அதிகப்படியான பற்றாக்குறையை பெற்ற மாநிலமாக உள்ளது – (ஜூன்1 – செப் 29) வரையிலான காலகட்டத்தில் கர்நாடகவில் 15% பற்றாகுறையும்,
கேரளாவில் 35% பற்றாக்குறையும் உள்ளது – மேலும் அடுத்த மூன்று நாட்களில் தென்மேற்கு பருவக்காற்று நாடு முழுவதும் விலகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் இதில் வேறு எந்த மாற்றங்களும் நிகழ வாய்ப்புகள் இல்லை.
உள் கர்நாடகா மற்றும் காவிரி நீர்படிப்பு பகுதிகளில் ஆரம்பம் முதலே நடப்பாண்டு தென்மேற்கு பருவக்காற்று சுணக்கம் காட்டி வந்த நிலையில் தற்போது முற்றிலும் விலகி உள்ளது – கர்நாடகாவில் பெரும்பாலான அணைகள் இந்த ஆண்டு முழு கொள்ளளவை எட்டாமல் இருப்பதையும் பார்க்க முடிகிறது.
கேரளாவில் 35% மற்றும் கர்நாடகாவில் 15% அளவிற்கு மழைப்பொழிவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் அதிர்ச்சி ரிப்போர்ட் கொடுத்துள்ளது.
NEWS EDITOR : RP