ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வந்த ‘இந்தியன் 2’ படம் விபத்து உள்ளிட்ட காரணங்களால் பாதியில் நின்றது. கமலின் ‘விக்ரம்’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால் தற்போது ‘இந்தியன் 2’ படத்தை மீண்டும் தொடங்கியுள்ளனர். ரத்னவேலு, ரவிவர்மன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனங்கள் தயாரிக்கின்றன.
இந்த படத்தில் மறைந்த நடிகர் விவேக், சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானிசாகர், குரு சோமசுந்தரம், பாபி சிம்ஹா, மனோபாலா, சமுத்திரக்கனி, ஜார்ஜ் மரியான், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கின்றனர். இந்தியன் 2 படப்பிடிப்பு Taipei நாட்டில் நடந்து வந்ததை அடுத்து, தென்னாப்பிரிக்கா நாட்டில் ஒரு சண்டைக்காட்சி படமாக்கப்பட்டு வந்தது.
அதை தொடர்ந்து படத்தின் கிளைமாக்ஸ் ஷூட்டிங் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் ஷங்கர் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் இருவரும் இணைந்து படத்திற்கான இசையை உருவாக்கி வரும் வீடியோ அண்மையில் வெளியாகி இணையத்தில் வைரலானது.
இந்நிலையில் ’இந்தியன் 2’ படத்தில் முக்கிய வில்லனாக பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் நடித்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்தின் மெயின் வில்லன் குறித்த ரகசியத்தை இதுவரை படக்குழுவினர் கட்டி காத்து வந்த நிலையில் தற்போது அந்த வில்லன் எஸ்.ஜே.சூர்யா என்பது தெரிய வந்துள்ளது.
அவர் தனது காட்சிகளின் படப்பிடிப்பை முழுமையாக முடித்து விட்டதாக கூறப்படுகிறது. கதாநாயகனாக வலம் வந்த எஸ்.ஜே.சூர்யா தற்போது சில படங்களில் வில்லனாகவும் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். ஆனால் ‘இந்தியன் 2’ படத்தில் வில்லனாக அவர் நடிப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.