மாங்காடு அடுத்த மதனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் காந்திராஜ். கடந்த சில ஆண்டுகளாக இதே பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது ஓட்டலுக்கு எதிரே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நவபிரகாஷ் என்பவர் ஓட்டல் தொடங்கியுள்ளார். எதிரெதிரே 2 ஓட்டல்களும் செயல்பட்டதால் நவபிரகாசத்தின் ஓட்டலில் வியாபாரம் சற்று குறைந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் காந்திராஜின் ஓட்டல் ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்துடன் இணைத்துள்ளதால் ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் பணியும் நடந்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன் வாடிக்கையாளர் ஒருவர் ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவை வாங்கி செல்ல வந்த ஊழியர் தெரியாமல் நவபிரகாஷ் கடைக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் வாடிக்கையாளர் ஆர்டர் செய்த உணவு இல்லை எனவும் ஆர்டரை கேன்சல் செய்து விடுமாறு நவபிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனம் காந்திராஜிக்கு தகவல் தெரிவித்த நிலையில் ஊழியர் தன்னுடைய கடைக்கு வரவில்லை எனவும் ஆர்டர் செய்த உணவு தயாராக இருப்பதாக கூறிய நிலையில், ஊழியரை அழைத்து பேசியபோதுதான் ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் ஊழியர் கடை மாறி சென்றதும் கடைகளுக்குள் இருந்த போட்டியில் நவபிரகாஷ் இவ்வாறு கூறியதும் தெரியவந்தது. இதனால் 2 கடை உரிமையாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில் நவபிரகாஷ் திடீரென கீழே இருந்த கல்லை எடுத்து வந்து கடையின் அருகே நின்று கொண்டிருந்த காந்திராஜை கல்லால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் காந்திராஜ் படுகாயம் அடைந்தார்.
தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பிய நிலையில் மாங்காடு போலீசில் புகார் அளித்தார். போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் மேலும் தன்னை தாக்கிய நபர் அரசியல் பிரமுகரின ஆதரவு தனக்கு இருப்பதால் எங்கு சென்றாலும் தன் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என தாக்கிய நபர் கூறியதாகவும் கண்காணிப்பு கேமரா ஆதாரங்களுடன் புகார் அளித்தும் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பாதிக்கப்பட்ட நபர் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
NEWS EDITOR : RP