வருசநாடு அருகே வெள்ளிமலை வனப்பகுதியில் மூலவைகை ஆறு உற்பத்தியாகிறது. இந்த ஆறு, கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள வருசநாடு, கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை உள்ளிட்ட பகுதிகளின் முக்கிய நீராதாரமாக விளங்கி வருகிறது. கடந்த சில மாதங்களாக போதிய மழை பெய்யாததால் நீர்வரத்து இன்றி மூலவைகை ஆறு வறண்டு கிடக்கிறது.
இந்தநிலையில் மூலவைகை ஆறு மாசடையும் வகையில் ஆற்றில் சாக்கடை கழிவுநீர் கலப்பதுடன், குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கிக்கிடக்கிறது. குறிப்பாக வருசநாடு கிராமத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இந்த வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் அப்படியே மூலவைகை ஆற்றில் கலந்து வருகிறது. மழை பெய்யும் நேரங்களில் கழிவுநீருடன் சேர்த்து பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் ஆற்றில் கலக்கிறது. இதனால் ஆற்றில் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து கிடப்பதுடன், ஆறு மாசடைந்து வருகிறது.
மேலும் வருசநாட்டில் மூலவைகை ஆற்றின் அருகில் டாஸ்மாக் கடை உள்ளதால் அங்கு மதுபானங்களை வாங்கும் மதுப்பிரியர்கள் பெரும்பாலானோர் ஆற்றில் அமர்ந்து மது குடித்து வருகின்றனர். அதில் சிலர் மதுபாட்டில்களை ஆற்றில் உடைத்து வீசுகின்றனர். இதனால் ஆற்றில் நீர்வரத்து ஏற்படும்போது உடைந்த மதுபாட்டில்கள் ஆறு முழுவதும் பரவி விடுகிறது. எனவே உடைந்த மது பாட்டில்கள் ஆற்றின் வழியாக தோட்டங்களுக்கு செல்லும் விவசாயிகளின் கால்களை பதம் பார்த்து வருகிறது.
இதற்கிடையே நேற்று முன்தினம் வருசநாட்டில் கனமழை பெய்தது. அப்போது சாக்கடை கழிவு நீருடன் பிளாஸ்டிக் குப்பைகளும் ஆறு முழுவதும் பரவியது. குறிப்பாக ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள உறை கிணறுகளை சுற்றி கழிவுகள் கிடந்தன. இதனால் குடிநீர் மாசடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மூலவைகை ஆற்றில் தேங்கிக்கிடக்கும் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகளையும் அகற்ற வேண்டும். குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஆற்றில் கலப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் ஆற்றில் மது அருந்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
NEWS EDITOR : RP