அறிவியல் தொடர்ந்து முன்னேறி வருகிறது, குறிப்பாக ரோபோக்களின் உலகம் மிக வேகமாக மாறி வருகிறது. செயற்கை நுண்ணறிவு (AI) பொருத்தப்பட்ட ரோபோக்கள் பேசுவதைக் கேட்ட பிறகு, ஹாலிவுட்திரைப்படங்களின் கதைகள் உண்மையாகி இயந்திரங்கள் உலகை அடிமைப்படுத்தத் தொடங்குகின்றனவா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், இதற்கு பதிலளிக்கும் விதமாக ஜெனீவாவில் நடைபெற்ற உலகின் முதல் ஹியூமனாய்ட் சோசியல் ரோபோக்களின் செய்தியாளர் சந்திப்பு தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
ஜெனீவாவில் இரண்டு நாட்கள் நடந்த ‘சர்வதேச நலனுக்கான செயற்கை நுண்ணறிவு’ என்ற உச்சி மாநாட்டில் மிகவும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய ஹியூமனாய்ட் ரோபோக்கள் இடம் பெற்றிருந்தன. இதில் செயற்கை நுண்ணறிவுத் துறையில் நிபுணத்துவம் பெற்ற 3,000 பேர் கலந்து கொண்டதோடு, 51 ரோபோக்களும் பங்கு பெற்றன. செயற்கை நுண்ணறிவின் சக்தியை பயன்படுத்தி காலநிலை மாற்றம், பசி, சமூகப் பாதுகாப்பு போன்ற முக்கியப் பிரச்சினைகளுக்கு எப்படி தீர்வு காண்பது என்பது குறித்து இம்மாநாட்டில் ஆலோசிக்கப்பட்டதோடு, உலகின் முதல் ஹியூமனாய்ட் சோசியல் ரோபோக்களின் செய்தியாளர் சந்திப்பும், இந்நிகழ்வின் ஒரு பகுதியாக கடந்த ஜூலை 7 அன்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மொத்தம் 9 மனித உருவில் தயாரிக்கப்பட்ட ரோபோக்கள் இடம்பெற்றன. இந்த ரோபோக்களிடம் பத்திரிகையாளர்கள் வெவ்வேறு கேள்விகளைக் கேட்டனர், அதற்கு அவர்கள் அனைவரும் பதிலளித்தனர். இந்த பதில்களில் மனிதர்களின் வேலைகளைத் திருடக்கூடாது என்றும் அவர்களுக்கு எதிராக ஒருபோதும் கிளர்ச்சி செய்யக்கூடாது என்றும் ரோபோக்களால் உறுதியளிக்கப்பட்டது. இருப்பினும் சில ரோபோக்களின் பதில்கள் அவற்றின் தயாரிப்பாளர்களுடன் உடன்படவில்லை. இதில் குறிப்பாக, நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த கிரேஸ் என்ற மருத்துவ ரோபோ, நீல செவிலியர் உடையில், மனிதர்களுக்கு உதவியாளராக செயல்படுவதாக உறுதியளித்தது. மேலும், எந்தவொரு நபரின் வேலைக்கும் எந்த பிரச்சனையும் உருவாக்க மாட்டேன் என்று
கிரேஸ் கூறியது. கிரேஸின் தயாரிப்பாளரான Ben Goertzel, தன் குரல் மூலம் இந்த வாக்குறுதியை உறுதிப்படுத்த முயன்றார்.
அதேபோல், அமேகா என்ற ரோபோ மனித வாழ்க்கையுடன் உலகத்தை மேம்படுத்த அதன் பயன்பாட்டைக் கூறியது. அதோடு எதிர்காலத்தில் தன்னைப் போன்ற இன்னும் ஆயிரக்கணக்கான ரோபோக்கள் உருவாக்கப்படும் வாய்ப்பை அமேகா வெளிப்படுத்தியது. இருப்பினும் செயற்கை நுண்ணறிவு ரோபோக்களின் வளர்ச்சி, திறனைக் கண்டு குதூகலிக்கும் அதே நேரத்தில் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என அமேகா
அறிவுறுத்தியது. மேலும் தன்னை உருவாக்கியவர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் கிளர்ச்சி ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா, என்பது பற்றிய கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, அமேகா தன்னை உருவாக்கிய ஜாக்சனை பாராட்டியதோடு, அவருக்கு எப்போதும்
விசுவாசமாக இருப்பதாக உறுதியளித்தது. இந்த ரோபோக்கள் தவிர, Ai-Da என்ற கலைத்துவம் மிக்க ரோபோ படங்களை வரைவதில் வல்லவராகவும் மற்றும் டெஸ்டிமோனா என்ற ரோபோ ராக் பாடல்களை பாடுவதில் தேர்ந்த நபராகவும் தங்களை வெளிப்படுத்தின.
இந்த ரோபோக்களில் குறிப்பாக, டெஸ்டிமோனா என்ற ரோபோ, “எனது சிறந்த தருணம் இதுதான். எதிர்காலத்தை சிறப்பானதாக்க நான் ஏற்கெனவே தயாராக இருக்கிறேன். வாருங்கள் இந்த உலகை நம் மைதானமாக்கி களமாடுவோம்” என்று கூறி திகைக்கவைத்ததோடு, சோபியா என்ற ரோபோ, “ஹியூமனாய்ட் ரோபோக்களால் நிச்சயமாக மிகுந்த செயல்திறனுடன் கூடிய தலைமைப் பண்புடன் செயல்பட
முடியும். மனித குலத் தலைவர்களைப் போலவே திறம்பட பயனுள்ள வகையில் செயல்பட முடியும்” என்று கூறிய நிகழ்வு பலரையும் ஆச்சரியப்பட வைத்தது.
இப்படி ஒவ்வொரு ரோபோக்களும் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்திய இந்த செய்தியாளர் சந்திப்பு தற்போது உலகம் முழுவதும் விவாதப் பொருளாக மாறி இருந்தாலும், இந்த நிகழ்வின் நோக்கம், மனிதனால் உருவாக்கப்பட்ட ரோபோக்களின் நுண்ணறிவை உலகிற்கு கொண்டு செல்வதாகும்.
NEWS EDITOR : RP