பெண் ஒருவர் தனது தந்தையின் ஓய்வூதியத்தை பெறுவதற்காக இறந்து தந்தையின் உடலை பல ஆண்டுகளாக வீட்டில் மறைத்து வைத்திருந்த சம்பவம் தைவான் நாட்டில் அரங்கேறியுள்ளது. அந்த பெண்ணின் தந்தை ராணுவத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணி புரிந்தது குறிப்பிடதக்கது. இந்நிலையில், அந்த பெண் தனது தந்தையின் சடலத்துடன் பல ஆண்டுகளாக வீட்டில் வசித்து வந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெங்கு தடுப்பு நடவடிக்கைகளுக்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெண்ணின் வீட்டிற்கு சுகாதாரப் பணியாளர்கள் சென்றுள்ளனர். அப்போது அந்த பெண் சுகாதார ஊழியர்களை தனது வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, அவருக்கு 60,000 நியூ தைவான் டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால், அவர்களை வீட்டுக்குள் அனுமதிக்காததால் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அந்த பெண் பலமுறை சுகாதார ஊழியர்களை வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுத்தார். அதன் பின், இது தொடர்பாக காவல்துறைக்கு புகார் கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர். காவல்துறையினர் அந்த பெண்ணிடம் அவரது தந்தை குறித்து கேட்டனர். முதலில், அந்தப் பெண் தனது தந்தை முதியோர் இல்லத்தில் அனுமதிக்கப்பட்டதாகக் கூறினார். பின்னர், தனது தந்தையை சீனாவிற்கு தனது சகோதரர் அழைத்துச் சென்றதாக காவல்துறையிடம் கூறினார். தனது தந்தை நிலச்சரிவில் இறந்துவிட்டதாகவும், அங்கிருந்து இவரின் உடலை எடுக்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.