திருவாரூர் நண்பர் இறந்த அதிர்ச்சியில் முதியவரும் உயிரை விட்டார். சிறுவயது முதல் இணைபிரியாமல் இருந்த நண்பர்கள் இறப்பிலும் ஒன்றாக சென்றனர். மன்னார்குடியில் நடந்த இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு.
சிறுவயதில் இருந்தே நண்பர்கள் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கீழ 4-ம் தெருவில் வசித்து வந்தவர் சிவராமகிருஷ்ணன்(வயது 80). மன்னார்குடி அசேஷம் பகுதியில் வசித்து வந்தவர் ராமலிங்கம்(80). இவர்கள் இருவரின் சொந்த ஊர் மன்னார்குடியை அடுத்த தலையாமங்கலம் ஆகும்.
ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்கள் இருவரும் சிறுவயதில் இருந்தே பள்ளியிலும், தொழில்நுட்ப கல்லூரியிலும் ஒன்றாக படித்தனர். மேலும் பாமணியில் உள்ள இந்திய உணவு கழக அலுவலகத்திலும் ஒன்றாக பணிபுரிந்தனர்.
இருவரும் ஒரே நாளில் பணியில் இருந்தும் ஓய்வு பெற்றனர். இவர்கள் இருவர் மட்டுமல்லாது இவர்களது குடும்பத்தினரும் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருந்து வந்தனர்.
சாவிலும் இணைபிரியவில்லை இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை சிவராமகிருஷ்ணன் வயது முதிர்வு காரணமாக இறந்து விட்டார். இவர் இறந்த தகவலை அவரது குடும்பத்தினர், சிவராமகிருஷ்ணனின் நண்பரான ராமலிங்கத்திடம் தெரிவித்தனர். சிறுவயது முதல் தன்னுடன் ஒன்றாக இருந்த உயிர் நண்பன் இறந்த செய்தியை ராமலிங்கத்தால் அவ்வளவு எளிதாக ஜீரணிக்க முடியவில்லை. இத்தனை ஆண்டுகாலம் தன்னுடன் ஒன்றாக இருந்த நண்பன் தன்னை விட்டு விட்டு சென்ற செய்தியை அறிந்த அதிர்ச்சியில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அடுத்த ெநாடியில் ராமலி்ங்கமும் பரிதாபமாக உயிரிழந்தார். சிறுவயது முதல் ஒன்றாக இருந்த நண்பர்கள் சாவிலும் இணைபிரியாத சம்பவம் அந்த பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
NEWS EDITOR : RP