சென்னையில் காசிமேடு மீன் சந்தைக்கு அடுத்து, மிகப்பெரிதாக விளங்குவது சிந்தாதிரிப்பேட்டை மீன் சந்தை. இது, 100 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் மிக பழமையான மீன் சந்தை ஆகும். இங்கு மொத்த வியாபாரம், சில்லறை வியாபாரம் ஒரே இடத்தில் நடைபெறுகிறது.
அதிகாலை 4 மணி முதலே இச்சந்தை சுறுசுறுப்பாக இயங்க தொடங்கிவிடும். உள்ளூர் மீன்கள் மட்டுமின்றி, வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களை சேர்ந்த சிறு மீன்கள்முதல் ராட்சத மீன்கள் வரை இங்கு விற்பனையாகின்றன. அசைவ உணவு பிரியர்கள் தங்களுக்கு பிடித்த மீன் வகைகளை வாங்க, காலை முதலே சிந்தாதிரிப்பேட்டை மீன் சந்தைக்கு வரத் தொடங்குகின்றனர். ஞாயிறுகளில் கூட்டம் இரட்டிப்பாகும்.
சிந்தாதிரிப்பேட்டை அருணாசலம் சாலையில் இந்த மீன் சந்தை உள்ளது. யாரேனும் இங்கு செல்ல வழிகேட்டால், முகவரி சொல்ல தேவையில்லை. லொக்கேஷன் ஷேர் பண்ணவும் அவசியம் இல்லை. வருவோர், போவோர் அனைவரும் மூக்கை பொத்திக் கொண்டு செல்கிறார்கள் என்றால், மீன் சந்தை நெருங்கிவிட்டது என்று தெரிந்து கொள்ளலாம்.
மீன் சந்தையின் உட்புறம் சுகாதார நடைமுறைகள் சரியாக பின்பற்றப்படுவது இல்லை. சந்தைக்கு வெளிப்புறம் மீன் கழிவு நீர், சாக்கடை நீர் என இரண்டும் கலந்து குமட்டும் நிலையை ஏற்படுத்துகிறது.
மீன் சந்தையை சுற்றி ஆங்காங்கே குப்பைகள் திறந்த வெளியில் கொட்டப்பட்டுள்ளன. பாழடைந்து கிடக்கும் கட்டிடங்களில் குப்பைகள் குவிந்து கிடப்பதோடு, திறந்தவெளி சிறுநீர் கழிப்பிடமாகவும் அதை பலர் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், மீன் வாசத்தையும் தாண்டி ‘குப்’பென்று துர்நாற்றம் வீசுகிறது.
இதன் காரணமாக, சிந்தாதிரிப்பேட்டை மீன் சந்தையை சுற்றியுள்ள பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, தொற்றுநோய் பரவும் அபாய சூழல் உள்ளது. சந்தையை சுற்றி அமைந்துள்ள கடைகளிலும் சுகாதாரம் கடைபிடிக்கப்படுவது இல்லை. இதனால், அந்த பகுதி முழுவதும் நாள் முழுக்க துர்நாற்றம் வீசுகிறது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சுத்தம், சுகாதாரத்தை கடைபிடித்து துர்நாற்றம், தொற்றுநோய் பரவல் அபாயத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த குமரேசன் என்பவர் கூறும்போது, ‘‘எங்கள் பகுதி துர்நாற்றம் இல்லாமல் சுத்தமாக இருக்க வேண்டும் என்றுதான் நாங்களும் விரும்புகிறோம். ஆனால், சிந்தாதிரிப்பேட்டை மீன் சந்தை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் துர்நாற்றம் வீசுவது மட்டும் நிற்கவே இல்லை. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.இதுபற்றி சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘சிந்தாதிரிப்பேட்டை மீன் சந்தை பகுதியில் நிலவும் சுகாதார சீர்கேடு குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.
வாகன ஓட்டி மாரிமுத்து கூறியபோது, ‘‘தினமும் இந்த வழியாகத்தான் செல்கிறேன். மீன்சந்தை வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்களின் வாகனங்கள் சாலையின் இருபுறமும் ஆக்கிரமித்து நிற்பது, போக்குவரத்துக்கு பெரும் இடையூறாக உள்ளது. வாகனங்கள் சீரான வேகத்தில் செல்ல முடிவது இல்லை. எனவே, இப்பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் ’’ என்றார்.
NEWS EDITOR : RP