காஞ்சிபுரம் மாவட்டம், முசரவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் முசரவாக்கம் – முத்துவேடு சாலை கன்னியம்மன் கோவில் பகுதியில் உள்ள தனது நிலத்தில் கோழிப்பண்ணை வைத்து நடத்தி வருகிறார். இவரது கோழி பண்ணையில் 3 ஆயிரம் பிராய்லர் கோழிக்குஞ்சுகள் வளர்ந்து வந்த நிலையில், இன்று அதிகாலையில் திடீரென கோழிப்பண்ணையின் கூரையில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
இதனையடுத்து இச்சம்பவம் குறித்து உடனடியாக காஞ்சிபுரம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கோழிப்பண்ணையில் எரிந்த தீயை போராடி அணைத்தனர். இருப்பினும் தீயணைப்பு வாகனம் வருவதற்குள் தீ முழுவதும் வேகமாக பரவி கோழிப்பண்ணையிலிருந்த 3 ஆயிரம் கோழிகளும் தீயில் கருகி உயிரிழந்தது. இன்னும் சில வாரங்களில் விற்பனைக்கு தயாராகி வந்த கோழிகள் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
NEWS EDITOR : RP