ஃபெஞ்சல் புயல் காரணமாக கடந்த 2 நாட்களாக திருவண்ணாமலையில் கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையினால் நேற்று இரவு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு பின்புறம் சுமார் 2,668 அடி உயர மலையில் இருந்து பாறை ஒன்று உருண்டு மலை அடிவாரத்தில் உள்ள வ.உ.சி. நகர் 11-வது தெருவில் உள்ள வீடுகளின் அருகில் விழுந்தது. அப்போது நிலச்சரிவு ஏற்பட்டதால் அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழை நீருடன் மண் இறங்கியது. இதில் ஒரு வீட்டின் மீது நிலச்சரிவு ஏற்பட்டு முழுவதுமாக மூடியது. அந்த வீட்டில் கணவன், மனைவி, அவர்களின் குழந்தைள் 2 பேர் மற்றும் கணவனின் அண்ணன் குழந்தைகள் 3 பேர் என்று மொத்தம் 7 பேர் இருந்ததாகவும், நிலச்சரிவால் 7 பேரும் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் உள்ளே சிக்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை டவுன் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் உடனடியாக அங்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.இந்நிலையில், திருவண்ணாமலையில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இருந்து முதற்கட்டமாக 3 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டன. மண்ணை அகற்றும்போது பொக்லைன் இயந்திரத்தின் முன்பக்க பக்கெட்டில் 3 பேரின் உடல் மீட்கப்பட்டது. அதனை தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணிகளை தீவிரப்படுத்தினர்.
திருவண்ணாமலை நிலச்சரிவில் சிக்கிய 7 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளன..!!
Please follow and like us: