ஏ.ஜி.எஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் தி கோட் திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் விஜய்யுடன், மோகன், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, மீனாட்சி செளத்ரி, லைலா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
தி கோட் படம் செப்டம்பர் 5-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியிடப்பட்டது. விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு தி கோட் படத்தின் அப்டேட் வருமா என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், ஜூன் 22ம் தேதி, விஜய் தனது 50வது பிறந்தநாள் வந்துள்ளது.
இதனிடையே கள்ளக்குறிச்சி அருகே கள்ளச் சாராயம் அருந்தியதில் 52 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து, த.வெ.க தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதுமட்டுமில்லாமல் கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்ற விஜய், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களிடம் நலம் விசாரித்தார். மேலும், இன்று காலை தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்க்குமாறு தவெக நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
விஜய்யின் 50வது பிறந்தநாளை வெறித்தனமாக கொண்டாட காத்திருந்த தவெக நிர்வாகிகள் தொண்டர்களுக்கு, இந்த உத்தரவு ஏமாற்றமாக அமைந்தது. ஆனால் அதே விஜய் ரசிகர்களுக்காக, தி கோட் படத்தின் 2வது பாடல் கிளிம்ப்ஸ் வெளியிடப்பட்டுள்ளது.
யுவன்சங்கர் ராஜா இசையில் சின்ன சின்ன கண்கள் என்ற டைட்டிலில் உருவாகியுள்ள இப்பாடல் எங்களுடைய இதயத்திற்கு நெருக்கமாக இருக்கும் என்று இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். இந்த பாடலை ஏ.ஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பவதாரிணியின் குரலில் பதிவு செய்துள்ளனர். அதே போல, இந்த பாடலில் விஜய்யும் பாடியிருக்கிறார். இப்பாடல் இன்று மாலை வெளியாகியுள்ளது.