தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களை நிலையான ஆசிரியர்களாக நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்..!!

Spread the love

சென்னை, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள் கோடை விடுமுறைக்குப் பிறகு நாளை மறுநாள் திறக்கப்படவிருக்கும் நிலையில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக 3,000 இடைக்கால ஆசிரியர்களை பணியமர்த்திக் கொள்ளும்படி பள்ளி நிர்வாகங்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் வாய்மொழியாக ஆணையிட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு 13,331 இடைக்கால ஆசிரியர்களை அமர்த்த பிறப்பிக்கப்பட்ட ஆணையின்படி, அமர்த்தப்பட்ட ஆசிரியர்களின் பணிக்காலத்தை நீட்டித்துக் கொள்ளும்படியும் வாய்மொழி ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்ற அடிப்படையில் இந்த நடவடிக்கையை ஏற்றுக்கொள்ளலாம் என்றாலும் கூட, இடைக்கால ஆசிரியர்களைக் கொண்டே பள்ளிகளை நடத்த முனைவது கல்வி வளர்ச்சிக்கு வகை செய்யாது.

இடைக்கால ஆசிரியர்களை அமர்த்துவது கல்வி வளர்ச்சிக்கு மட்டுமின்றி, சமூகநீதிக்கும், மனித உரிமைக்கும் எதிரானது. நிலையான ஆசிரியர்களை அமர்த்தும் போது, இட ஒதுக்கீட்டு முறை கடைபிடிக்கப்படும்; ஆனால், இடைக்கால ஆசிரியர்கள் பணியமர்த்தலில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படுவதில்லை.

அதனால் சமூகநீதி மறுக்கப்படுகிறது. அதேபோல், நிலையான ஆசிரியராக அமர்த்தப்படும் ஒருவருக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படும்; ஆனால், இடைக்கால ஆசிரியர்களாக அமர்த்தப்படுவோருக்கு வழங்கப்படும் ஊதியம் தினக்கூலித் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதை விட குறைவாகும். ஆசிரியர்களை இடைக்காலமாக அமர்த்தி அவர்களின் உரிமைகளை பறிப்பதை ஏற்க முடியாது. நிலையான ஆசிரியர்களை அமர்த்தாமல் இடைக்கால ஆசிரியர்களை அமர்த்த எந்த நியாயமும் இல்லை. ஒவ்வொரு முறையும் இடைக்கால ஆசிரியர்களை ஏன் அமர்த்துகிறீர்கள்? என்று வினா எழுப்பப்படும் போதெல்லாம், நிலையான ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க காலக்கெடு தேவைப்படுவதாகவும், அதுவரை இடைக்கால ஏற்பாடாகவே இடைக்கால ஆசிரியர்கள் அமர்த்தப்படுவதாகவும் அரசுத் தரப்பில் விடையளிக்கப்படுகிறது. அது சரியல்ல. கடந்த ஆண்டு 13,331 இடைக்கால ஆசிரியர்கள் அமர்த்தப்பட்ட போது, அதிக அளவாக 6 மாதங்களில் அவர்களுக்கு மாற்றாக புதிய நிலையான ஆசிரியர்கள் அமர்த்தப்படுவார்கள் என்று கூறப்பட்டது. ஆனால், முழு கல்வியாண்டு முடிவடைந்தும் புதிய ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கைக் கூட வெளியிடப்படவில்லை. கடந்த ஆண்டு அமர்த்தப்பட்ட இடைக்கால ஆசிரியர்களுக்கு இந்த ஆண்டும் பணிநீட்டிப்பு வழங்கப்படுகிறது. இது எந்த வகையில் நியாயம்? தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளுக்கு கடந்த பத்தாண்டுகளாக இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. நிலையான ஆசிரியர்களே இல்லாமல் மாணவர்களுக்கு எவ்வாறு தரமான கல்வியை வழங்க முடியும்? நிலையான ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க அதிக காலம் ஆகும் என்பதை ஏற்க முடியாது. தமிழ்நாட்டில் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் 80 ஆயிரத்திற்கும் கூடுதலாக உள்ளனர். அவர்களுக்கு போட்டித்தேர்வு தேவையில்லை என்பது தான் அனைத்துத் தரப்பினரின் நிலைப்பாடும் ஆகும். அதனடிப்படையில் அவர்களை நிலையான ஆசிரியர்களாக பணியமர்த்தி காலியிடங்களை நிரப்ப 15 நாட்கள் போதுமானது. எனவே, தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களை நிலையான ஆசிரியர்களாக நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

NEWS EDITOR : RP

Please follow and like us:

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp
YouTube
Instagram
Telegram