ஆன்லைன் விளையாட்டுக்களை தடை செய்து சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என மத்திய அரசுத்தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை எதிர்த்து ஆன் லைன் விளையாட்டு நிறுவனங்கள் தாக்கல் செய்த வழக்குகள், தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தன.
ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் ராகவாச்சாரி, மணிசங்கர், சதீஷ் பராசரன் ஆகியோர் ஆஜராகி வாதங்களை முன் வைத்தனர். அப்போது அவர்கள், தமிழக அரசு சட்டத்தில் கூறப்பட்டுள்ள ஒழுங்குமுறைகள் அனைத்தையும் மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருக்கிறது என்றும், மத்திய அரசின் அறிவிப்புக்கு விரோதமாக தமிழக அரசு சட்டம் இயற்ற முடியாது என்றும் குறிப்பிட்டனர்.
ஏராளமான கட்டுப்பாடுகளுடன் ஆன் லைன் விளையாட்டுக்கள் விளையாட அனுமதிக்கப்படுகிறது என்றும், ஆன் லைன் விளையாட்டுக்களுக்கு அடிமையாவது தென் மாநிலங்களில் அதிகரித்துள்ளதாக கூறுவதற்கு எந்த புள்ளிவிவரங்களும் இல்லை என தெரிவித்தனர்.
நீதிபதி சந்துரு அரசுக்கு அறிக்கை அளிக்கும் முன் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களின் கருத்துக்களை கோரவில்லை எனவும், முறையான விசாரணை நடத்தாதது பாரபட்சமானது என்றும் குறிப்பிட்டனர்.
ஆன்லைன் விளையாட்டுக்களில் மோசடிக்கு எதிராக போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளதாகவும், ஐகோர்ட்டு தீர்ப்புகளை செல்லாததாக்கும் வகையில் தமிழக அரசு சட்டம் இயற்றியுள்ளதாகவும் வாதிட்டனர். ஆன்லைனில் தடை செய்து சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு தகுதி இல்லை என்றும், ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தனி விதிமுறைகளையும், சுய கட்டுப்பாடுகளையும் பின்பற்றுவதாக விளக்கமளித்தனர். ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு தடை விதிப்பது குறித்து ஆய்வு செய்த நீதிபதி சந்துரு குழு, இரு வாரங்களில் அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்ததாகவும், அந்த அறிக்கை பொதுவெளியில் வெளியிடப்படவில்லை எனவும் குற்றம் சாட்டினர். தொடர்ந்து மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் வகையில் மத்திய அரசு சட்டம் கொண்டு வந்துள்ளதாகவும், மத்திய அரசின் சட்டப்படி, ஆன்லைன் விளையாட்டுக்களின் சூதாட்டம் நடைபெறுவது தடுக்கப்படும் எனவும் கூறினார். ஆன்லைன் விளையாட்டுக்களை தடை செய்து சட்டமியற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை எனவும் குறிப்பிட்டார்.
NEWS EDITOR : RP