வருடாந்திர தானியங்கி தகவல் பரிமாற்ற ஏற்பாட்டின் கீழ், ஸ்விட்சர்லாந்து வங்கிகளில் உள்ள சுமார் 36 லட்சம் கணக்குகள் குறித்த விவரங்கள் 104 நாடுகளிடம் பகிரப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, அந்நாட்டு வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கணக்கு விவரங்கள் அடங்கிய 5-ஆவது தொகுப்பை இந்தியாவிடம் ஸ்விட்சர்லாந்து வழங்கியுள்ளது.
இந்தியாவிடம் பகிரப்பட்டுள்ள விவரங்களில், ஸ்விட்சர்லாந்து வங்கிகளில் உள்ள நூற்றுக்கணக்கான கணக்குகள் இடம்பெற்றுள்ளன. அந்த வங்கிகளில் இந்தியாவை சேர்ந்த சில தனிநபர்கள் பல கணக்குகள் வைத்துள்ளனர். பெரு நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகளும் பல கணக்குகள் வைத்துள்ளன. அதுகுறித்த தகவல் அந்த விவரங்களில் இடம்பெற்றுள்ளன.
ஸ்விஸ் வங்கி கொடுத்துள்ள விவரங்களில் ஸ்விட்சர்லாந்து வங்கிகளில் கணக்கு வைத்திருப்போரின் பெயர், முகவரி, அவர்கள் எந்த நாட்டில் வசிக்கின்றனர், வரி அடையாள எண், கணக்கில் இருப்பில் உள்ள தொகை உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
வருமான வரிக் கணக்குத் தாக்கலின்போது தங்கள் வங்கிக் கணக்கு விவரங்களை வரி செலுத்துவோர் மறைக்காமல் தெரியப்படுத்தியுள்ளார்களா என்பதை வருமான வரித்துறை அதிகாரிகள் சரிபார்க்க இந்த விவரம் உதவும். மேலும் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக சந்தேகம், பணமோசடி, பயங்கரவாதத்துக்கு நிதியுதவி
தொடர்பான விசாரணைகளுக்கும் அந்த விவரம் பயன்படும்.விவரங்களில் வங்கிக் கணக்கு வாயிலான பண பரிமாற்றங்கள், டெபாசிட்டுகள், கடன் பத்திரங்கள் மற்றும் இதர சொத்துகள் மீதான முதலீடு மூலம் ஈட்டப்படும் வருவாய் உள்பட அனைத்து விதமான வருவாய் குறித்த தகவல்கள் இடம்பெறும். எனவே வருமான வரிக் கணக்கில் காட்டாமல் சொத்து வைத்திருப்பவர்கள் மீது வலுவான சட்ட நடவடிக்கை மேற்கொள்ள இந்த விவரம் உதவும்.
NEWS EDITOR : RP