சர்க்கரை அல்லாத இனிப்புகள் பயன்படுத்துதல் தொடர்பாக உலக சுகாதார அமைப்பு புதிய வழிகாட்டுதல் மற்றும் எச்சரிக்கை ஒன்றை சில நாட்களுக்கு முன் வெளியிட்டது. சிலர் உடல் எடையை குறைக்க சர்க்கரை அல்லாத இனிப்புகளை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அவற்றை நீண்ட காலம் பயன்படுத்தும் போது டைப் 2 நீரிழிவு மற்றும் இதயநோய் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படலாம் என்றும், எனவே அவற்றை பயன்படுத்துவதை பரிசீலினை செய்யுமாறும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
சுக்ரலோஸ், அஸ்பார்டேம் சாக்கரின், உள்ளிட்ட சர்க்கரை அல்லாத இனிப்புகள் உணவுப் பொருள்கள், குளிர்பானங்களில் காணப்படுகின்றன. உடல் பருமனைத் தடுக்க உதவுவதாகக் கருதப்படும் சர்க்கரை அல்லாத செயற்கை இனிப்புகள், சர்க்கரையிலிருந்து வேறுபட்டவை அல்ல என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் ஊட்டச்சத்து மற்றும் உணவுப் பாதுகாப்பு இயக்குநர் பிரான்சேஸ்கோ பிராங்கா கூறுகையில், “உடல் எடையைக் குறைக்க, சர்க்கரை அல்லாத செயற்கை இனிப்புகள் எந்த வகையிலும் உதவாது. சர்க்கரை நிறைந்த பழங்கள் உள்ளிட்ட உணவுப் பொருள்கள், சர்க்கரை சேர்க்கப்படாத உணவு வகைகளை மக்கள் பயன்படுத்த வேண்டும். உடலின் ஆரோக்கியம் கருதி, இனிப்புச் சுவையை உணவில் சேர்ப்பதை ஆரம்பத்தில் இருந்தே மக்கள் குறைத்துப் பழக வேண்டும்” என்றார்.
ஆனால் உலக சுகாதார அமைப்பின் கருத்து ஏற்புடையது அல்ல என கோகோ கோலா, பெப்சி, ரெட் புல், டாபர் உள்ளிட்ட நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதனிடையே உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகளை அறிவியல் குழு மதிப்பீடு செய்து வருவதாக இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் தேசிய உணவு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
NEWS EDITOR : RP