செங்கோட்டையில் நகராட்சி அலுவலகத்தில் மேற்பார்வையாளர் மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். செங்கோட்டை, தென்காசி மாவட்டம் செங்கோட்டை விஸ்வநாதபுரத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் ராஜேஷ் (வயது 25). இவர் செங்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் தற்காலிக மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். இன்று காலை ராஜேஷ் வழக்கம் போல நகராட்சி அலுவலகத்திற்கு பணிக்கு சென்றார்.
பின்னர் சிறிது நேரத்தில் வெளியே செல்வதற்காக மீண்டும் தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட தயாரானார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்தவாறே ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.
தகவலறிந்ததும் செங்கோட்டை இன்ஸ்பெக்டர் ஷாம்சுந்தர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதற்கிடையே ராஜேசின் உடலை பார்த்து அவரது குடும்பத்தினர் கதறி அழுதகாட்சிகள் பரிதாபத்தை ஏற்படுத்தியது. போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் கொலையை கண்டித்தும், தப்பி ஓடிய கும்பலை உடனடியாக கைது செய்யக்கோரியும் ராஜேசின் உறவினர்கள் அவரது நகராட்சி அலுவலகம் முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கொல்லம்-திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். எனினும் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
NEWS EDITOR : RP