புதிதாக விதிக்கப்பட்டுள்ள உச்சபட்ச பயன்பாட்டு நேர மின் கட்டணத்தை முழுமையாக திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனத்தினர் வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக 12 தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் சென்னை கிண்டி சிட்கோ அலுவலகத்தில் அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், டி.ஆர்.பி.ராஜா பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் தொழில்துறை செயலாளர் அருண் ராய், தொழில் ஆணையர் அர்ச்சனா பட்நாயக், தொழில் வணிக கூடுதல் ஆணையர் கிரேஸ் பச்சாவ், மின்வாரிய மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக இணை நிர்வாக இயக்குனர் விஷுமகாஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் நிருபர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் சிறு,குறு தொழில் நிறுவன முனைவோர் மதுரையில் மின்சார கட்டணத்தை குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இது முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தொழிற்சங்க பிரதிநிதிகளை அழைத்து பேச உத்தரவிட்டார். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்கள் அடங்கிய 12 சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. கூட்டத்தில் பீக் ஹவர் கட்டணத்தை குறைக்க வேண்டும் உள்பட 5 கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர். சிறு, குறு தொழில்கள் பாதிக்காத வகையில் சிறப்பாக செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டத்தில் வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பாக முதல்-அமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு 2 அல்லது 3 நாட்களில் பேசி விரைவில் நல்ல முடிவு சொல்லப்படும் என நம்பிக்கை அளித்து உள்ளோம். இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் மின் கட்டணம் குறைவாக உள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த உதய் திட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் இருந்த வரை ஒப்பந்தத்தில் கையெழுத்து போடவில்லை. கடந்த அ.தி.மு.க.ஆட்சியில் முன்னாள் மின்துறை அமைச்சர் தங்கமணி உதய் மின் திட்டத்திற்கு ஆதரவாக கையெழுத்து போட்டதால் தான் மின் கட்டணம் உயர்ந்து உள்ளது.
NEWS EDITOR : RP