ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் நபருக்கும் அந்நிறுவனத்தின் மேனேஜருக்கும் சமூக வலைதளத்தில் உரையாடல் நடந்துள்ளது. அதில் மேனேஜர் பணியாளரிடம் நாளை காலை 7 மணி ஷிப்டிற்கு வேலைக்கு வருமாறு குறுஞ்செய்தி அனுப்புகிறார். அதற்கு பணியாளர் பதில் அளிக்காத நிலையில், நான் அனுப்பிய செய்தியை நீ பார்த்துவிட்டதை அறிகிறேன். வேலைக்கு வர காலை 6.15 மணிக்கு தயாராக இருக்கவும் எனக் கூறியுள்ளார்.
இதற்கு பதில் அளித்துள்ள பணியாளர், நாளை எனக்கு வார விடுமுறை நாள், அதனால் பிரைன் என்ற மற்றோரு நபரை அலுவலகம் வரச்சொல்லுங்கள் எனக் கூறுகிறார். இதற்கு மேனேஜர் பிரைன் திருமணமானவர் மேலும் அவருக்கு குழந்தை உள்ளது. குடும்பஸ்தர் என்பதால் அவருக்கு வேலைகள் இருக்கும். நீ சிங்கிள் தானே. உனக்கு என்ன வேலை இருக்கிறது அலுவலகம் வா எனக் கூறியுள்ளார்.
இதற்கு பதில் அளித்துள்ள பணியாளர், விடுமுறை என்பதால் ஏற்கனவே தனது சொந்த வேலைகள் குறித்து திட்டமிட்டுள்ளதாகவும், மதியம் வேண்டுமென்றால் வரமுடியும், காலையில் தன்னால் வர முடியாது எனவும் கூறியுள்ளார். இதற்கு மேனேஜர், நாளை காலையில் அலுவலகத்தில் வேலை இருப்பதாகவும், அப்படி என்ன வேலை இருக்கிறது உனக்கு எனவும் வினவியுள்ளார்.
பணியாளர், தனது நண்பனை வேறு இடம் ஒன்றிற்கு அழைத்துச் செல்வதாக ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தன்னால் காலை பணிக்கு வரமுடியாது எனவும் கூறியுள்ளார். மேனேஜரோ, உன் நண்பரை அழைத்துச் செல்ல வேறு நபரை ஏற்பாடு செய்ய முடியாதா, உனக்கு இம்மாத சம்பளம் எவ்வளவு முக்கியம் என்பது எனக்கு தெரியும் அதனால் நாளை காலை 7 மணிக்கு வேலைக்கு வந்து சேர் எனக் காட்டமாக கூறியுள்ளார்.
மேனேஜரின் பதிலால் ஆத்திரம் அடைந்த பணியாளர், நான் சிறந்த முறையில் பணி புரிபவன் என்பது தங்களுக்கு தெரியும். அதை நான்கு வருடங்களாக என் உழைப்பின் வாயிலாக நான் வெளிப்படுத்தியுள்ளேன். ஆனால் நீங்கள் பேசிய விதம் சரி இல்லை. இனி உங்களுடன் என்னால் பணி புரிய முடியாது. நான் வேலையில் இருந்து விடைபெறுகிறேன். திங்கள் கிழமைக்குள் எனது வேலையிலிருந்து விடுபடும் கோரிக்கையை தாங்கள் ஏற்காவிடில் நேரில் உங்களை சந்திப்பேன் எனக் கூறியுள்ளார்.
மேனேஜர் – பணியாளர் இடையே நடைபெற்ற இந்த உரையாடலின் ஸ்க்ரீன் ஷாட் சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் பலர் பணியாளருக்கு ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள, அந்த பணியாளர் வேலையை தான் விரும்பி செய்ததால் எனது இந்த முடிவால் நாளை வருத்தப்பட மாட்டேன் என நம்புவதாகவும், நிர்வாகம் தன்னிடம் கடுமையாக நடந்துகொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
NEWS EDITOR : RP