2021ம் ஆண்டு சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக பதவியேற்ற சைலேந்திர பாபுவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்து சென்னை பெருநகர காவல் ஆணையராக இருந்த சங்கர் ஜிவாலை, தமிழ்நாட்டின் புதிய சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக நியமித்து நேற்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
புதிய டி.ஜி.பி யாக பொறுப்பேற்பதற்கு முன்பாக சங்கர் ஜிவாலுக்கு அணி வகுப்பு மரியதை வழங்கப்பட்டது. இதனை அடுத்து சென்னை கடற்கரை சாலையில் அமைந்துள்ள காவல்துறை தலைமை அலுவலகத்தில் தமிழ்நாட்டின் 32 வது சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சங்கர் ஜிவால் பதவியேற்றுக் கொண்டார். முன்னதாக முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு பூங்கொத்து கொடுத்து டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த டிஜிபி சங்கர் ஜிவால், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதாகவும், அதனை மேலும் மேம்படுத்த உழைக்க உள்ளதாகவும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர் தமிழகத்தில் ரவுடிகளுக்கும், கள்ளச்சாராயத்திற்கும் எதிராகவும் கடுமையான நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் காவல்துறையினருக்கான விடுமுறை, அவர்களின் நலன் போன்றவைக்கு கூடுதல் கவனம் செலுத்த உள்ளதாகவும், சென்னை காவல்துறையில் செயல்படுத்திய திட்டங்களை மாநிலம் முழுவதும் செயல்படுத்த உள்ளதாகவும் டிஜிபி சங்கர் ஜிவால் கூறினார்.
சங்கர் ஜிவால் சென்னை பெருநகர காவல் ஆணையராக இருந்த கடந்த 2 ஆண்டுகளில் சென்னை போலீஸ்துறையை தற்கால நவீன உலகத்துக்கு அழைத்து சென்றார். சிற்பி, அவள், பறவை, மகிழ்ச்சி, ஆனந்தம், காக்கும் காவல் கரங்கள் போன்ற சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வந்தார். சென்னையில் முத்திரை பதித்த இவர் தமிழ்நாடு முழுவதும் தனது சிறப்பான முத்திரையை தொடருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
NEWS EDITOR : RP