நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர் பிரபஞ்சன் 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவப் படிப்புகளில் சேர நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று இருப்பது அவசியம். அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளாக நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி 2023-24-ம் கல்வியாண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 7ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வினை எழுத 20 லட்சத்து 87 ஆயிரத்து 449 மாணவர்கள் விண்ணப்பித்தனர். 499 நகரங்களில் அமைந்துள்ள 4,097 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடத்தப்பட்டது. நீட் தேர்வில் மொத்தம் 2 லட்சத்து 87 ஆயிரத்து 449 பேர் தேர்வெழுதினர். தமிழ்நாட்டை பொறுத்தவரையில் 95 ஆயிரத்து 824 மாணவிகள், 51 ஆயிரத்து 757 மாணவர்கள் என மொத்தம் ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 581 பேர் எழுதினார்கள்.
இந்த நிலையில் நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. அதன்படி நாடு முழுவதும் 11 லட்சத்து 45 ஆயிரத்து 976 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு முடிவுகளின்படி தமிழகத்தை சேர்ந்த பிரபஞ்சன் 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். மேலும் முதல் பத்து இடங்களில் 4 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல் ஒலக்கூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக பணிபுரியும் ஜெகதீஷின் மகன் பிரபஞ்சன் இன்று வெளியான் நீட் தேர்வு முடிவில் 720/720 மதிப்பெண் பெற்று அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றார்.
மாணவர் பிரபஞ்சன் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பை தனியார் பள்ளியில் படித்தது குறிப்பிடத்தக்கது.
NEWS EDITOR : RP