நடிகை ராஷ்மிகா மந்தனா தனது ரசிகர்களை சந்திக்கும்போது எப்போதும் புன்னகையுடன் காணப்படுவது வழக்கம். வர்த்தக விளம்பர படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொள்ள அவர் நேற்று மும்பைக்கு சென்று உள்ளார்.
அப்போது, தனது கேரவனில் இருந்து வெளியே வந்த அவர் கூடியிருந்த ரசிகர்களை நோக்கி கையசைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். கருப்பு நிற குர்தா மற்றும் துப்பட்டா அணிந்தபடி காணப்பட்ட அவர், கேரவனுக்கு வெளியே ரசிகர்களிடம் புகைப்படங்களை எடுத்து கொண்டார்.
அதன்பின், ரசிகர்களுடன் உரையாடினார். உடன் அவரது பாதுகாவலர்களும் பாதுகாப்புக்காக அவரை சூழ நின்றிருந்தனர். கேரவனுக்கு வெளியே நின்றபடி ரசிகர்கள் அனைவருடனும் அவர் செல்பி புகைப்படமும் எடுத்து கொண்டார்.
வரிசையாக, ஒவ்வொரு ரசிகருடனும் அவர் பொறுமையாக புகைப்படங்களை எடுத்து கொண்டார். அப்போது, ஒரு புகைப்படத்திற்கு தயாரானபோது, ரசிகர் ஒருவரின் மொபைல் போனை கையில் பிடித்து கொண்டார்.
அதன்பின்னர் படம் எடுக்கும்படி கூறினார். ஆனால், என்ன அவசரமோ, அந்த ரசிகர் உடனடியாக தன்னுடைய போனை பறித்து கொண்டார். இதனால் சற்று அதிர்ச்சி ஏற்பட்டாலும், சூழ்நிலையை திறமையாக எதிர்கொண்ட ராஷ்மிகா சிரித்தபடியே காணப்பட்டார். அந்த சூழலில், அமைதி காத்த அவர், அடுத்த நபருடன் புகைப்படம் எடுக்க தயாரானார். இது அவரது எளிமையை காட்டுகிறது என ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. ராஷ்மிகா, சமீபத்தில் இயக்குநர் சந்தீப் ரெட்டியின் அனிமல் படத்தில் இணைந்து உள்ளார். இந்த படத்தில் அவருடன் ரன்பீர் கபூர் இணைந்து நடிக்கிறார். வருகிற டிசம்பர் 1-ந்தேதி படம் திரைக்கு வருகிறது. ராஷ்மிகாவின் புஷ்பா: தி ரூல் 2-ம் பாகம் திரைப்படம் வருகிற 2024-ம் ஆண்டு திரைக்கு வரவுள்ளது.
NEWS EDITOR : RP