தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளை நடிகர் விஜய் நேரில் அழைத்து ஊக்கத்தொகை வழங்கினார். இதற்கான நிகழ்ச்சி நீலாங்கரையில் ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது.
இந்த விழாவில் சுமார் 1500 மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். அதேசமயம் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் கல்வி பயின்று அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ மாணவிகளுக்கும் நடிகர் விஜய் ஊக்கத்தொகை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிக்கு வெள்ளை சட்டையில் வந்த விஜய்யை கண்ட அனைவரும் அரங்கம அதிர கூச்சலிட்டு அவரை வரவேற்றனர். பின்னர் நிகழ்ச்சியில் மாணவர்களிடம் பேசிய விஜய், தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினார்.
அப்போது 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 600க்கு 600 மதிப்பெண்களைப் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்து புதிய சாதனை படைத்த திண்டுக்கல்லைச் சேர்ந்த மாணவி நந்தினிக்கு வைர நெக்லஸை பரிசாக வழங்கினார். வைர நெக்லஸை மாணவியின் தாயாரிடம் கொடுத்து, அதனை அணிவிக்க செய்து பார்த்தார்.
தொடர்ந்து, தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கினார் நடிகர் விஜய். அதன்படி முதல் இடம் பிடித்தவர்களுக்கு தலா ரூ.25,000, இரண்டாம் இடம் பிடித்தவர்களுக்கு தலா ரூ.15,000, 3ஆம் இடம் பிடித்தவர்களுக்கு ரூ.10,000-ம் காசோலைகளாக வழங்கப்பட்டன.
NEWS EDITOR : RP