தமிழக முதல்-அமைச்சரின் ‘போதை இல்லா தமிழகம்’ என்ற கோட்பாட்டை வலியுறுத்தி போதை பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்காக ஆவடி போலீஸ் கமிஷ்னர் அருண் உத்தரவின்பேரில் அம்பத்தூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அலமேலு தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர கஞ்சா வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி அம்பத்தூர் கள்ளிக்குப்பம் சோதனை சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட தனிப்படை போலீசார், அந்த வழியாக சந்தேகப்படும்படி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அந்த காரில் 3 கிலோ கஞ்சா மற்றும் ரூ.4 லட்சம் இருந்தது. இது தொடர்பாக காரில் இருந்த திருமுல்லைவாயலை சேர்ந்த மதன் (வயது 43), அம்பத்தூரை சேர்ந்த பாபு (39) மற்றும் கங்காராம் (29) ஆகிய 3 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர். பின்னர் அவர்களை கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் விசாகப்பட்டினத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட அந்த கஞ்சாவை மேலும் சிலர் மூலம் கடல்வழி மார்க்கமாக பைபர் படகு மூலம் இலங்கைக்கு கடத்த திட்டம் தீட்டியது தெரிந்தது. அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் ராயபுரத்தை சேர்ந்த முகமது ஆரிஸ் (45), சீதாராம் கோத்தாரா (43), புதுக்கோட்டையை சேர்ந்த ஆரோக்கியா அஜின் (25) மற்றும் ஜீவா (24) ஆகிய மேலும் 4 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து மேலும் 2 கிலோ கஞ்சா மற்றும் ரூ.3½ லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
NEWS EDITOR : RP