கொல்கத்தா- சென்னை இடையே தினசரி விரைவு ரயிலாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை இயங்கி வருகிறது. மேற்கு வங்காளம், ஒடிசா, ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய நான்கு மாநிலங்களை இணைக்கும் விதமாக இதன் வழித்தடம் அமைந்துள்ளது.
கடந்த ஜூன் 2ம் தேதி வழக்கம் போல மேற்கு வங்க மாநிலம் சாலிமரிலிருந்து புறப்பட்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஒடிசாவின் பஹனகா ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருக்கும் போது சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின்போது ரயில் நேருக்கு நேர் மோதியதில் ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டன.
இதையும் படியுங்கள் : AI கேரக்டரை காதலித்து கரம்பிடித்த அமெரிக்க பெண் – ’மிகச்சிறந்த கணவர் இவர்தான்’ என பேட்டி
அப்போது பெங்களூருவில் இருந்து ஹவுரா சென்ற ரயில் தடம்புரண்டு கிடந்த பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளாகியது. இந்த கோர விபத்தில் 301 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே, காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பக்த சரண் தாஸ், “இந்த விபத்துக்குப் பிறகு ஆயிரக்கணக்கானோர் தங்களது டிக்கெட்டுகளை ரத்து செய்துள்ளனர். ரயிலில் பயணம் செய்வது பாதுகாப்பானது அல்ல என்று மக்கள் நினைக்கிறார்கள்” என்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் தெரிவித்திருந்தார்.
இதற்கு ட்விட்டரில் மறுப்பு தெரிவித்துள்ள ஐஆர்சிடிசி நிர்வாகம், ”இது முற்றிலும் தவறானது. ஒடிசா விபத்துக்கு பிறகு ரத்து செய்யப்படும் டிக்கெட்டுகளின் எண்ணிக்கை கூடவில்லை. மாறாக ஜூன் 1 ஆம் தேதி 7.7 லட்சமாக இருந்த எண்ணிக்கை, ஜூன் 3 ஆம் தேதி 7.5 லட்சமாக குறைந்துள்ளது” என்று பதிவிட்டுள்ளது.