இந்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவீதம் வரி விதித்து கடந்த 16-ம் தேதி உத்தரவிட்டுள்ளது. இதில் வெங்காயம் என்பது பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம் இரண்டும் ஒன்றாகவே உள்ளது. பெரிய வெங்காயம் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் பயன்பாட்டில் உள்ளது. இதன் விலை ஏற்றத்தாழ்வு என்பது இந்திய அளவிலான பிரச்னையாகும்.
ஆனால், சின்ன வெங்காயம் என்பது தமிழ்நாட்டின் கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் மட்டுமே விளைவிக்கக் கூடியது. தமிழர்கள் வாழ்ந்து வரும் வெளிநாடுகளுக்கு மட்டுமே சின்ன வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
இந்திய அரசு பெரிய வெங்காயத்தோடு ஒப்பீடு செய்து, ஒவ்வொரு முறையும் தடைகளை விதித்தும், வரிகளை விதித்தும் தமிழ்நாட்டை சேர்ந்த சின்ன வெங்காய விவசாயிகளை வஞ்சித்து வருகிறது. ஏற்றுமதி செய்யப்படும் போது கொடுக்கப்படும் குறியீட்டு எண் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் இரண்டுக்கும் ஒரே எண்ணாக இருந்து வருகிறது. சின்ன வெங்காயத்துக்கு தனி ஏற்றுமதி குறியீட்டு எண் உருவாக்க வேண்டுமென்கிற கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.கஷ்டப்படும் விவசாயிகளைக் கண்டு கொள்ளாமல், நுகா்வோரை மட்டுமே அரசு கருத்தில் கொள்கிறது. ஏற்றுமதி தரத்தில் சந்தை நிலவரத்தை அனுசரித்து கொள்முதல் செய்யப்பட்ட சின்ன வெங்காயங்களை ஏற்றுமதி செய்ய இயலாமல் வியாபாரிகளும் தவித்து வருகின்றனா். எனவே, வரி விதிப்பை ரத்து செய்வதுடன், சின்ன வெங்காயத்துக்கு தனியாக ஏற்றுமதி குறியீட்டு எண்ணையும் விரைந்து வழங்க வேண்டும்”
ஒரு கிலோ சின்ன வெங்காயத்தின் குறைந்தபட்ச உற்பத்தி செலவு 30 ரூபாயாகும். விவசாயிகள் கிலோ ரூ.45க்கு விற்றால் மட்டுமே நஷ்டம் இல்லாமல் தப்பிக்க முடியும். ஆனால் தற்போதைய ஏற்றுமதி வரி விதிப்பு கிலோவுக்கு 20 ரூபாயை குறைத்துள்ளது. சின்ன வெங்காயம் உற்பத்தி செய்ய எவ்வித மானியமும், சலுகைகளும் அளிக்கப்படுவதில்லை. நஷ்டத்துக்கு நிவாரணமும் இல்லை. அதனால் வரி விதிக்க எவ்வித தார்மீக உரிமையும் கிடையாது.
NEWS EDITOR : RP