இமயமலை பயணத்தை முடித்துவிட்டு தற்போது லக்னோவில் இருக்கும் நடிகர் ரஜினிகாந்த், உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேலை ராஜ் பவனில் சந்தித்து பேசினார்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ரம்யாகிருஷ்ணன், தமன்னா, வசந்த் ரவி, மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சிவராஜ்குமார், சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் உலக அளவில் ரூ.400 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்று லக்னோவில் உள்ள ராஜ் பவனுக்கு சென்ற ரஜினிகாந்த், உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேலை சந்தித்து பேசினார். இன்று மாலை உ.பி. முதல்வருடன் சேர்ந்து ஜெயிலர் படத்தை பார்க்க உள்ளார். மேலும், அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலுக்கு சென்று ரஜினிகாந்த் வழிபாடு செய்யவுள்ளார்.
படம் வெளியாவதற்கு முந்தைய நாள் நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்குச் சென்றார். இதையடுத்து, நேற்று (ஆக 18) லக்னோ சென்றுள்ள அவர், இன்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் இணைந்து ‘ஜெயிலர்’ திரைப்படத்தை பார்க்க உள்ளதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
NEWS EDITOR : RP