மிசோரம் மாநிலம் சாய்ராங் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலம் இடிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
மிசோரம் தலைநகர் அய்ஸ்வாலில் இருந்து சுமார் 21 கி.மீ., தள்ளியிருக்கும் சாய்ரங் பகுதியில் புதன்கிழமை 11 மணிக்கு இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. விபத்து நடக்கும் போது அங்கு 40 தொழிலாளிகள் பாலத்தில் வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. “இடிபாடுகளில் இருந்து இதுவரை 17 பேரின் உடல் மீட்கப்பட்டுள்ளதாகவும், பலர் காணாமல் போயிருப்பதாகவும் போலீசார் தெரிவித்திருப்பதாக செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
மிசோ இளைஞர் சங்கத்தின் சாய்ராங் கிளையைச் சேர்ந்தவர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.விபத்து குறித்து வடகிழக்கு ரயில்வேயின் தலைமை செய்தித் தொடர்பாளர் சப்யசாச்சி தே கூறுகையில், “இடிந்து விழுந்த பாலம் வடகிழக்கு பகுதிகளின் அனைத்து தலைநகரங்களையும் இணைக்கும் இந்திய ரயில்வேயின் திட்டத்தின் ஓர் அங்கமாகும். கடந்த சில ஆண்டுகளாகவே பாலத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தது. பைராபி மற்றும் சாய்ராங் ரயில் நிலையங்களுக்கு இடையே குருங் ஆற்றின் மீது கட்டப்பட்டு வருகிறது. இந்த பாலத்தின் ஒரு தூணின் உயரம் மட்டும் 104 மீட்டர்கள், மிசோரம் தலைநகர் அய்ஸ்வாலை அடையும் முன்பாக சாய்ராங் கடைசி நிலையமாக இருக்கும் வகையில் இந்த பாலம் கட்டப்பட்டு வந்தது.
இந்த விபத்து சுமார் 11 மணியளவில் நிகழ்ந்திருக்கிறது. விபத்துக்கான காரணம் குறித்தும், விபத்து நடக்கும் போது எத்தனை பேர் பணியில் இருந்தனர் என்பது குறித்தும் இன்னும் கண்டறியப்படவில்லை” என்று தெரிவித்தார்.
மிசேராம் முதல்வர் சோரம்தங்கா விபத்து குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “அய்ஸ்வாலுக்கு அருகே உள்ள சாய்ராங் பகுதியில் கட்டப்பட்டு வந்த பாலம் இன்று இடிந்து விழுந்தது விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சுமார் 15 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. இந்தத் துயரம் குறித்து அறிந்து மிகவும் வேதனையடைந்தேன். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். மீட்புப் பணிகளில் பெருமளவில் வந்து உதவிய மக்களுக்கு எனது அன்பினைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
NEWS EDITOR : RP