எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் முன்னாள் எம்.பி ராகுல் காந்தி பாட்னா சென்றடைந்தார். பாட்னா, அடுத்த ஆண்டு நடக்க உள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான ஏற்பாடுகளில் அரசியல் கட்சிகள் இப்போதே வரிந்துகட்டத் தொடங்கி உள்ளன. இந்தத் தேர்தலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ‘ஹாட்ரிக்’ சாதனை படைக்க மத்தியில் ஆளும் பா.ஜ.க. கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படத் தொடங்கி உள்ளது. தேர்தலுக்கான வியூகங்களை வகுப்பதில் அந்தக் கட்சி தீவிரம் காட்டி வருகிறது.
அதன் அடுத்த கட்டமாக, மக்களவை தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை நடத்துவதற்காக நிதிஷ் குமார், எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தை பாட்னாவில் இன்று (23-ந்தேதி) கூட்டி உள்ளார். பாட்னாவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறுகிற இந்தக் கூட்டம் அரசியல் அரங்கில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், பாட்னாவில் நடைபெறும் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், காங்கிரஸ் முன்னால் எம்.பி ராகுல்காந்தி ஆகியோர் விமானம் மூலம் தற்போது பாட்னா சென்றடைந்துள்ளனர். விமான நிலையத்தில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கூட்டத்தில் 20 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் மக்களவை தேர்தல் தொடர்பாக முக்கிய முடிவு எடுப்பதுடன், தீர்மானமும் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
NEWS EDITOR : RP