காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இரண்டு நாட்கள் சுற்றுப் பயணமாக மணிப்பூர் சென்றுள்ளார். நிவாரண முகாம் செல்ல முயன்ற ராகுல் காந்தியை மணிப்பூர் போலீசார் அனுமதி மறுத்து தடுத்து நிறுத்தினர். இதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்த நிலையில், காரில் சென்றால் நாட்டு வெடிகுண்டு தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதால் தடுத்தி நிறுத்தியதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மணிப்பூர் மக்களை சந்தித்தது குறித்து ராகுல் காந்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ”மணிப்பூர் சகோதர சகோதரிகளின் துயரங்களைப் பார்க்கவும், கேட்கவும், உணரவும், இன்று மொய்ராங்கில் உள்ள நிவாரண மையங்களுக்குச் சென்றேன். வெறுப்பும் வன்முறையும் ஒரு பேரழிவு. நாம் அனைவரும் அதை அன்பாலும், ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்வதாலும் மட்டுமே எதிர்கொள்ள முடியும்.
மணிப்பூரில் வன்முறையால் சொந்தங்களையும், வீடுகளையும் இழந்தவர்களின் நிலையைப் பார்ப்பதும் கேட்பதும் மனவேதனை அளிக்கிறது. நான் சந்திக்கும் ஒவ்வொரு சகோதர, சகோதரி மற்றும் குழந்தையின் முகத்திலும் உதவிக்கான குரல் ஓங்கி ஒலிக்கிறது. மணிப்பூருக்கு இப்போது தேவை அமைதி மட்டுமே.
NEWS EDITOR : RP