அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவான ‘புஷ்பா 2’ திரைப்படம் கடந்த டிச.5ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் வெளியாவதற்கு முன்பு படத்தின் பிரீமியர் காட்சி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் டிச.4 அன்று இரவு 10.30 மணியளவில் திரையிடப்பட்டது. இதனை பார்ப்பதற்கு நடிகர் அல்லு அர்ஜூன் சந்தியா திரையரங்கிற்கு சென்றார். அப்போது அல்லு அர்ஜூனை பார்ப்பதற்காக அதிக அளவிலான ரசிகர்கள் தியேட்டரில் கூடினர்.இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குடும்பத்தினருடன் பிரீமியர் காட்சி பார்க்க வந்த ரேவதி (வயது 35) என்ற பெண்ணும், அவரது மகன் ஸ்ரீதேஜாவும் (வயது 9) நிலை தடுமாறி கீழே விழுந்தனர். அப்போது ரசிகர்கள் பலரும் இருவர் மீதும் ஏறி மிதித்தனர். இதனால் இருவரும் மூச்சுபேச்சின்றி சுயநினைவை இழந்தனர்.இதையடுத்து, இருவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சிறுவன் ஸ்ரீதேஜாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவரது தாயாரான ரேவதி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருததுவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தைய நிலையில் ரேவதி உயிரிழந்த சம்பவத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.