புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே கொத்தம் பட்டியைச் சேர்ந்த பன்னீர்செல்வம், வாசுகி தம்பதியின் மகள் சுகுணா (33). இவர், முடக்குவாத தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு, படுத்த படுக்கையிலேயே பெற்றோரின் பராமரிப்பில் இருந்து வருகிறார். 8-ம் வகுப்பு வரை படித்துள்ள சுகுணா, சிறு வயது முதல் புத்தக வாசிப்பில் மிகுந்த ஆர்வமுடையவர்.
தொடர்ந்து, சமூக வலைதளங்களில் கவிதைகளை எழுதி வருகிறார். கவிதைக்காக இதுவரை ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். இந்நிலையில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் சுகுணா, புதுக்கோட்டையில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவுக்கு வரவேண்டும் என்ற ஆசையை சமூக வலைதளங்களில் இரு தினங்களுக்கு முன்பு பதிவு செய்தார்.
இதைத்தொடர்ந்து, புதுக்கோட்டை டீம் மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் உதவியுடன் சுகுணாவை புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவுக்கு ஒருங்கிணைப்பாளர்கள் நேற்று அழைத்து வந்தனர். ஸ்ட்ரெச்சரில் படுத்த படுக்கையிலேயே புத்தக அரங்குகளை பார்வையிட்டார். அப்போது, அவருக்குப் பிடித்த புத்தகங்களை அங்கு வந்திருந்த வாசகர்கள் மற்றும் புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள் வாங்கிக் கொடுத்து ஆசையை நிறைவேற்றினர்.தொடர்ந்து வாசிப்பதும், எழுதுவதும் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. மிகவும் வறுமையில் வாடும் எனது நிலையைக் கருத்தில் கொண்டு அரசு உதவி செய்ய வேண்டும் என்றார். சுகுணாவின் தாயார் வாசுகி பேசிய போது, எனது மூத்த மகள் சுகுணாவை இந்த புத்தகத் திருவிழாவில் பங்கேற்க வைத்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கூலி வேலையும் சிறிதளவு விவசாயம் செய்து வரும் தங்களுக்கு தமிழ்நாடு அரசு போதிய உதவிகளை செய்ய முன்வர வேண்டும் என்றார்.
பின்னர், சுகுணா கூறியது: 10 ஆண்டுகளாக வீட்டிலேயே முடங்கிக் கிடந்த என்னை புத்தகத் திருவிழாவில் பங்கேற்க வைத்து, ஆசையை நிறைவேற்றிய அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கு வந்ததும் மன அழுத்தத்தில் இருந்து முழுமையாக விடுபட்டதாக உணர்கிறேன். எனக்குப் பிடித்த ஏராளமான புத்தகங்களை பலரும் வாங்கிக் கொடுத்துள்ளனர்.
NEWS EDITOR : RP