அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பின்பேரில் முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடி 21-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை அமெரிக்காவில் பயணம் மேற்கொள்கிறார். 21ம் தேதி அமெரிக்கா சென்றடையும் மோடி, நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா., தலைமையகத்தில் உள்ள புல்வெளியில் சர்வதேச யோகா தினத்தில் பங்கேற்கிறார். பின்னர் அடுத்த நாளான ஜூன் 22 அன்று , அமெரிக்க பார்லிமென்டின் கூட்டுக் குழு கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். இதனைத் தொடர்ந்து வெள்ளை மாளிகையில் அதிபர் பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் அளிக்கும் விருந்தில் பிரதமர் கலந்து கொள்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமருடன், ஐ.நா. பொதுச்சபை தலைவர் சாபா கொரோசி, ஐ.நா.வுக்கான இந்திய துாதர் ருச்சிரா கம்போஜ், நியூயார்க் மேயர் எரிக் ஆடம்ஸ், அமெரிக்க நடிகையும், பிரபல பாடகியுமான மேரி மில்பர்ன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
தொடர்ந்து 24 மற்றும் 25-ம் தேதி வரை எகிப்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி அங்கு முதல் உலகப்போரில் எகிப்து நாட்டுக்காக போரிட்டு உயிரிழந்த இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார். பின்னர் அந்நாட்டின் உயர்மட்ட தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.
இதற்கிடையில், பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணத்தின் போது, அடுத்தடுத்து நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க வேண்டி இருப்பதால், அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் அவர் உரை நிகழ்த்துவதற்கு வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இந்திய வம்சாவளியினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
NEWS EDITOR : RP