திருவள்ளூர் பொன்னேரி அடுத்த சோழவரம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட அத்திப்பேடு காலனியில் வசிப்பவர் மோசஸ் (வயது 25). இவர் சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு ஐ.டி கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் தனது தந்தை ரவி, தாய் மலர் ஆகியோருடன் வசித்து வந்தார். மோசஸ் கடந்த 5 மாதத்திற்கு முன்பு புழல் பகுதியை சேர்ந்த எஸ்தர் (வயது 21) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். எஸ்தர் கணவர் மோசஸ் வீட்டில் மாமனார், மாமியார் உடன் வசித்து வந்தார். இவர் 3 மாதம் கர்ப்பமாக இருந்தார்.
திருமணமான 5 மாதத்திற்குள் கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. எனவே எஸ்தர் மனமுடைந்து காணப்பட்டார் என கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று வீட்டில் படுக்கை அறையில் கதவை பூட்டிக்கொண்டு எஸ்தர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் வீட்டார் அறை கதவை தட்டி பார்த்தபோது திறக்கப்படவில்லை. உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது எஸ்தர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து சோழவரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் எஸ்தர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
திருமணமான 5 மாதத்தில் கர்ப்பிணி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
NEWS EDITOR : RP