டெல்லியில் பிரபல நடிகர் பிரபாஸ் நடிக்கும் ஆதிபுருஷ் திரைப்படத்தின் டிக்கெட் ரூ.2,200-க்கு விற்கப்படுகிறது.
பிரபாஸின் ஆதிபுருஷ், இந்த ஆண்டின் மிகப்பெரிய பான்-இந்திய படங்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது. ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகும் ஆதிபுருஷ் இந்திய இதிகாசமான ராமாயணத்தின் தழுவலாகும். இத்திரைப்படத்தில் க்ரீத்தி சனோன் சீதா தேவியாகவும், சைஃப் அலி கான் ராவணனாகவும் நடித்துள்ளனர்.
ஆதிபுருஷ், தமிழ், கன்னடம், இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. நீண்ட நாட்களாக இப்படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருந்தனர். பாகுபலி 2 படத்துக்கு பிறகு பிரபாஸ் நடிக்கும் அனைத்து படங்களும் ஹிந்தியிலும் வெளியாகும் விதத்தில் உருவாக்கப்பட்டு வருகின்றன.
கடந்த மே 6-ம் தேதி இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் வெளியானது. அதன்படி, படத்தின் போஸ்டர் ஒன்றை வெளியிட்ட படக்குழு மே 9-ம் தேதி ஆதிபுருஷ் ட்ரெய்லரும், ஜூன் 16-ம் தேதி திரைப்படமும் வெளியாகும் என்று அறிவித்திருந்தது.
இந்தப் படத்திற்கான டிக்கெட் முன்பதிவுகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. குறிப்பாக டெல்லியில் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே பல திரையரங்குகளில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், டெல்லி என்சிஆர் பகுதியில் உள்ள திரையரங்கில் ஆதிபுருஷ் படத்துக்கு அதிக விலைக்கு டிக்கெட் விற்பனையான தகவல் கிடைத்திருக்கிறது. இங்குள்ள பிவிஆர் திரையரங்கில் ஒரு டிக்கெட் ரூ.2,200க்கு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
NEWS EDITOR : RP