மின்சார கனவு மூலம் தமிழ் ரசிகர்களிடம் பரிச்சயமானவர் நடிகை கஜோல். மின்சாரக் கன்னா படத்திற்கு முன்பே இந்தியில் ஷாருக் கான் கஜோல் நடித்த ”குச் குச் ஹோத்தா ஹே” படம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமான ஒன்று. நீண்ட இடைவெளிக்கு பிறகு கஜோல், நடிகர் தனுஷ் நடிப்பில் 2017-ம் ஆண்டு வெளியான ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருந்தார். இப்படத்தில் கஜோலின் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது. தற்போது நெட்பிளிக்ஸில் வெளியாக இருக்கும் ‘லஸ்ட் ஸ்டோரீஸ் 2’ தொடரில் கஜோல் நடித்துள்ளார்.
சமீபத்தில் கஜோல் திடீரென சமூக வலைத்தளங்களில் இருந்து விலகுவதாக அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தார். இதுகுறித்து ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் அவர் வாழ்க்கையின் கடினமான சூழலில் இருக்கிறேன் என குறிப்பிட்டிருந்தார்.
கஜோலுக்கு டுவிட்டரில் 36 லட்சம் பாலோவர்களும், இன்ஸ்டாகிராமில் 1.4 கோடிக்கு மேல் பாலோவர்களும் உள்ளனர். இந்த அளவிற்கு ரசிகர்களை வைத்துள்ள அவர், திடீரென இப்படி அறிவித்தது ரசிகர்களுக்கிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அவர் லஸ்ட் ஸ்டோரீஸ் 2 படத்தின் விளம்பரத்திற்காக கஜோல் இப்படி செய்திருப்பதாக கஜோல் மீது சமூக வலைதளங்களில் விமர்சனங்களை முன்வைத்தனர்.
இந்த நிலையில் கஜோல் சமீபத்திய பேட்டி ஒன்றில் “இந்தியா போன்ற ஒரு நாட்டில் மாற்றம் என்பது மெதுவாகத்தான் நடக்கும். மிக மிக மெதுவாகத்தான் நடக்கிறது. இந்தியர்களாக நாம் நம்முடைய பாரம்பரியங்கள் மற்றும் கலாச்சாரத்தில் மூழ்கியுள்ளோம்.
படிப்பறிவு இல்லாத அரசியல் தலைவர்கள் நம் நாட்டில் உள்ளனர். அவர்கள்தான் நம்மை ஆட்சி செய்து வருகின்றனர். அவர்களில் பலருக்கும் எதிர்காலம் பற்றிய கண்ணோட்டமே இல்லை. எதிர்காலம் பற்றிய சிந்தனை கல்வி மூலம்தான் கிடைக்கும். கல்வி என்பது குறைந்தபட்சம் மாறுபட்ட கண்ணோட்டத்துக்கான வாய்ப்பையாவது கொடுக்கும்” என்று கூறியிருந்தார்.
கஜோலின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பலரும் கஜோலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில், தனது கருத்து குறித்து கஜோல் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.
கஜோல் தனது ட்விட்டர் பக்கத்தில் ” எனது பேச்சில் கல்வி மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து மட்டுமே நான் சுட்டிக்காட்டினேனன். எந்தவொரு அரசியல் தலைவரையும் சிறுமைப்படுத்துவது எனது நோக்கமல்ல. நாட்டை சரியான திசையில் வழிநடத்தும் உயர்ந்த தலைவர்கள் நமக்கு கிடைத்திருக்கின்றனர்.” என தெரிவித்தார்.
NEWS EDITOR : RP