தென் கொரியா முவான் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி சுவற்றின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 28 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
தாய்லாந்தின் பாங்காங்கில் இருந்து ஜெரு ஏர் பிளைட் 2216- என்ற விமானம் தென் கொரியாவுக்கு வந்தது. தென் கொரியாவின் ஜியோல்லா மாகாணத்தின் தலைநகரான முவான் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு விமானம் வருகை தந்துள்ளது. விமானத்தில் 175 பயணிகள், 6 விமான பணியாளர்கள் என மொத்தம் 181 பயணம் செய்துள்ளனர். விமானம் தரையிறங்கும் போது லேண்டிங்க் கியரில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால், ஓடுபாதையில் இருந்து விலகிய விமானம், ரன்வேக்கு பக்கவாட்டில் இருந்த சுவரில் மோதியது.
இந்த பயங்கர விபத்தில் விமானம் மோதிய அடுத்த நொடியிலேயே தீ பிடித்தது. விமானத்தில் இருந்து கரும்புகைகள் வெளியேறியது. ஏர்போர்ட்டிலேயே விமானம் விபத்துக்குள்ளானதை பார்த்த பயணிகள் பீதியில் அலறினர். விமானம் விபத்தை பார்த்ததும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர் முழு வீச்சில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முதற்கட்டமாக 28 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது. மேலும், பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
விமான விபத்து தொடர்பாக உடனடியாக விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர். தற்போது இந்த விமானம் விபத்துக்குள்ளாகும் முன்பு பதிவான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன் கஜகஸ்தானில் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில், 38 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நடந்த ஓரிரு நாட்களில் மீண்டும் பெரிய அளவிலான விமான விபத்து நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.