தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 15-ந்தேதி தொடங்கிய 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் கடந்த 14-ந் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 800 விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். மீன்பிடி தடைகாலம் முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமையான கடந்த வாரம் குைறந்த அளவிலான விசைப்படகுகளே கரை திரும்பியதால் பெரிய வகை மீன்கள் எதிர்பார்த்த அளவு விற்பனைக்கு வரவில்லை. இதனால் மீன்களின் விலை அதிகமாக விற்பனை செய்யப்பட்டன.
இந்த நிலையில் தடைகாலம் முடிந்து 2-வது ஞாயிற்றுக்கிழமையான நேற்று ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரைக்கு திரும்பின. இதனால் காசிமேட்டில் கடந்த வாரத்தை காட்டிலும் ஓரளவு பெரிய மீன்கள் விற்பனைக்கு வந்து இருந்தன. மேலும் மீன்கள் வரத்தும் அதிகமாக இருந்ததால் கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரம் மீன்களின் விலை சற்று குறைந்து இருந்தது. இதனால் அதிகாலை முதலே காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்வாங்க குவிந்திருந்த பொதுமக்கள், மீன்களை போட்டி போட்டு வாங்கிச்சென்றனர்.
கடந்த வாரம் ரூ.1500-க்கு விற்கப்பட்ட முழு வஞ்சிரம் நேற்று ரூ.1200-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதுபோல் ரூ.1900-க்கு விற்கப்பட்ட துண்டுகளாக வெட்டப்பட்ட வஞ்சிரம் ரூ.1600-க்கும், ரூ.500-க்கு விற்ற சங்கரா ரூ.400-க்கும், ரூ.500-க்கு விற்ற இறால் ரூ.350-க்கும், ரூ.600-க்கு விற்ற சீலா ரூ.500-க்கும், ரூ.ஆயிரத்துக்கு விற்பனையான கருப்பு வவ்வால் மீன் ரூ.850-க்கும், ரூ.1400-க்கு விற்ற வெள்ளை வவ்வால் ரூ.1200-க்கும், ரூ.700-க்கு விற்ற கொடுவா ரூ.600-க்கும், ரூ.1100-க்கு விற்ற டைகர் இறா ரூ.900-க்கும், ரூ.400-க்கு விற்ற நண்டு ரூ.350-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
கடந்த வாரத்தைவிட கூடுதலாக விசைப்படகுகள் வந்ததால் மீன்கள் விலை குறைந்து இருந்தது. அடுத்த வாரம் ஆழ்கடலுக்கு சென்ற ேமலும் அதிகளவிலான விசைப்படகுகள் கரை திரும்பி வரும் என்பதால் அப்போது இதைவிட பெரிய அளவிலான மீன்கள் அதிகளவில் வரும் எனவும், இதனால் மீன்கள் விலை மேலும் குறைய வாய்ப்பு இருப்பதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.
NEWS EDITOR : RP